Published : 12 Nov 2016 08:20 AM
Last Updated : 12 Nov 2016 08:20 AM
ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் நோட்டுகள் குறைவான அளவிலேயே நிரப்பப்பட்டதால் நேற்று சிறிது நேரத்திலேயே அவற்றில் பணம் தீர்ந்து போனது. மேலும் பல இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த பிரச்சினைகளுக்கான காரணங்கள் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் மூத்த தலைவரும், பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரியுமான டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஏடிஎம் மையங்களில் 11-ம் தேதி முதல் பணம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டும் பொதுமக்களுக்கு உரிய முறையில் பணம் கிடைக்காத தற்கு என்ன காரணம்?
100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு வரவில்லை என்பதே காரணம். பொதுவாக ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைக்க முடியும். ஆனால், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் நிரப்பப்பட்டன. அந்த நோட்டுகளின் வரத்து போதுமான அளவு இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டது.
100 ரூபாய் நோட்டுகளை தேவைக்கு ஏற்ப வங்கிகள் வாங்கி வைத்துக்கொள்ளவில்லையா அல்லது ரிசர்வ் வங்கியிடமே இருப்பு இல்லையா?
இந்தியாவில் 85 சதவீதம் அளவுக்கு 500, 1,000 ரூபாய் நோட்டுகள்தான் புழக்கத்தில் இருந்தன. மீதமுள்ள 15 சதவீதம்தான் பிற நோட்டுகள். பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.1,000, ரூ.500, ரூ.100 என 3 வகையான நோட்டுகளை அதிகபட்சம் ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் வரை வைக்க முடியும். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே இயந்திரங்களில் நிரப்பினோம்.
எனவே, ஓர் இயந்திரத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே வைக்க முடிந்தது. இந்த தொகை குறைந்த எண்ணிக்கையிலான மக்களின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்தது.
2,000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்கும் வசதியை செய்யாதது ஏன்?
2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்கான தொழில்நுட்ப வசதி தற்போது இல்லை. 100, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஏடிஎம்மில் வைக்க முடியும். 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் இதுவரை வரவில்லை. எனவே, ரூ.100 நோட்டுகளைக் கொண்டே சமாளித்து வருகிறோம்.
பணம் நிரப்புதல், ஏடிஎம் இயந்திரம் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் அவுட்சோர்சிங் ஆட்களால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டதா?
எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை தமிழகத்தில் வங்கியோடு இணைந்துள்ள 128 மையங்களை காலையிலேயே திறந்திருந்தோம். இந்த மையங்களில் எங்கள் ஊழியர்களே பணத்தை நிரப்பினர். அதே நேரத்தில், வெளி இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் அவுட்சோர்சிங் நபர்கள்தான் பணத்தை நிரப்ப வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லா வங்கிகளிலும் பணம் நிரப்ப வேண்டும், பராமரிக்க வேண்டும் என்கிறபோது அவர்களிடம் தேவையான ஆள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததும் தாமதத்துக்கான காரணம் ஆகும்.
முதல் நாளே இப்படியென்றால் வரும் நாட்களில் மக்கள் கூட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பின் முயற்சியால், கூட்டம் நிறைந்த வங்கிகளில் பொதுமக்களுக்கு நாற் காலி கொடுப்பது, மாற்றுத்திறனா ளிகள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று முடிந்த அளவு கனிவுடன் நடத்துகிறோம். ரிசர்வ் வங்கி போதுமான அளவு 100 ரூபாய் நோட்டுகளை தராத நிலையில், ரிசர்வ் வங்கியிடம் திருப்பி கொடுப்பதற்காக வைத்திருந்த அழுக்கடைந்த நோட்டுகளில் ஓரளவு நல்லதாக இருந்த 100 ரூபாய் நோட்டுகளையும் பொதுமக்களுக்கு விநியோகித் தோம். இதற்கு மேல், ரிசர்வ் வங்கி பணம் தந்தால்தான் பிரச்சினையின்றி சேவையை வழங்க முடியும்.
இந்த பிரச்சினைகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தினீர்களா?
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்குள்ள ரிசர்வ் வங்கியிடமே போதுமான அளவு பணம் இல்லை. அச்சகத்திலிருந்து வந்தால்தான் உண்டு என்கிறார்கள். போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு விநியோகிப்பதாலும், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் பொருத்தும் வசதியை ஏற்படுத்துவதாலும்தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.
ஏடிஎம் மையங்களைப் போலவே, பணம் செலுத்தும் தானியங்கி இயந்திரங்களும் உள்ளனவே அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
பணம் செலுத்தும் தானியங்கி இயந்திரங்களில் ஒரு நாளைக்கு ரூ.49 ஆயிரம் வரை பணத்தை செலுத்த மட்டுமே முடியும். அதில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளையும் செலுத் தலாம்.
அதே போல், பணத்தை செலுத்தவும், திரும்ப எடுக்கவும் ரிசைக்ளர் என்னும் இயந்திரம் உள்ளது. அந்த இயந்திரத்தில் தற்போது பணம் செலுத்துகிற வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT