Published : 18 Nov 2022 11:39 PM
Last Updated : 18 Nov 2022 11:39 PM
சேலம்: சேலம் மாவட்டத்தில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை தற்காக்க வேண்டி கால்நடை துறை மூலம் முதல்கட்டமாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆறு லட்சம் மாடுகள்: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு தொழிலில் முன்னிலையில் சேலம் மாவட்டம் உள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் ஆறு லட்சம் மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சேலம் மாவட்ட கால்நடை துறை மூலம் சேலத்தில் கால்நடைகளுக்கான பன்முக மருத்துவமனையும், ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வீரபாண்டி, எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் 149 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, பருவகால சூழல் மாற்றத்தால் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவலை முன்கூட்டியே தடுக்கும் பணியில் கால்நடை துறை இணை இயக்குனர் புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஈ, கொசுக்களால் பெரியம்மை நோய் பரவல்: பருவ மழை காலங்களில் மாடுகளை கடிக்கும் ஈக்கள் மற்றம் கொசுக்களின் உற்பத்தி பரவலாக அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. தற்போது, சேலம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மாடுகளில் இருந்து இந்த அறிகுறி தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து தற்காக்கும் நடவடிக்கையில் கால்நடை துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்: பெரியம்மை நோய் அறிகுறி உள்ள மாடுகளுக்கு 10 வெற்றிலை, பத்து கிராம் மிளகு, பத்து கிராம் உப்பு, தேவையான வெல்லம் அனைத்தும் அரைத்து, முதல் நாள் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறையும், இரண்டாவது நாள் ஒரு நாளைக்கு மூன்று வேளை என இரண்டு வாரங்களுக்கு மாடுகளுக்கு கொடுத்து வர பெரியம்மை நோய் குணமாகும். பெரியம்மையால் ஏற்படும் கொப்புளங்களுக்கு குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, பத்து பல் பூண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, துளசி இலை ஒரு கைப்பிடி, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 500 மில்லி, மஞ்சள் தூள் 20 கிராம், மருதாணி இலை ஒரு கைப்பிடி அனைத்தும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து கொதிக்கவைத்து, பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்தியதும் மருந்தை மேலே தடவி வர புண் விரைவில் ஆறும். இதற்கான மூலிகை மருந்து குறித்த தகவல் அடங்கிய பிரசுரங்கள் விவசாயிகளிடம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக தடுப்பூசி போடும் பணி: இதுகுறித்து கால்நடைத்துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பாபு கூறும் போது, ‘‘கடந்த மாதங்களில் வடமாநிலங்களில் பெரியம்மை நோய் தாக்குதலுக்கு மாடுகள் உள்ளாகியது. தமிழகத்தில் பெரியம்மை நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை தற்காக்க வேண்டி, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசிகள், 149 கால்நடை மருந்தகங்கள் மூலம் போடும் பணி நடந்து வருகிறது. எனவே, பெரியம்மை நோய் தாக்காமல் இருக்க கால்நடை வளர்ப்பவர்கள் கொட்டகையை கிருமிநாசின கொண்டு சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது அவசியம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT