Published : 18 Nov 2022 05:23 PM
Last Updated : 18 Nov 2022 05:23 PM

பிரியா மரணம் | அலட்சியமாக மருத்துவப் பணிகள் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல் துறை

மறைந்த மாணவி பிரியா

சென்னை: மாணவி பிரியா மரணம் தொடர்பாக வழக்கில், அலட்சியமாக மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தை (P1 புளியந்தோப்பு நிலையம்) சேர்ந்த பிரியா, அவரின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சைக்காக, அக்டோபர் மாதம் 19ம் தேதி பெரியார் நகர் (K5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லை) அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில், அவருக்கு நவம்பர் 7-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர், நவம்பர் 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது வலது முழங்கால் வரையிலான பகுதி நவம்பர் 9-ம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து, அவரது தந்தை ரவி நவம்பர் 11-ம் தேதி அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் மனு ரசீது வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நவம்பர் 15-ம் தேதி, பிரியா சிகிச்சை பலனின்றி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறந்தார். இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய மனு ரசீது சட்டபிரிவு 174 (சந்தேக மரணம்) என்று மாற்றப்பட்டது. அன்றைய தினமே, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மருத்துவக் கல்வி இயக்குநரின் அறிக்கையில், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப்பின் பிரியாவிற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய மருத்துவ கவனிப்பில் ஏற்பட்ட குறைபாடே அவரது இறப்பிற்கு காரணம் என குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து, மேற்படி காவல் நிலையத்தின் சட்டப் பிரிவு 174 லிருந்து 304 (A) க்கு (கவனக்குறைவு மரணம்) மாற்றம் செய்யப்பட்டு, தொடர் புலன் விசாரணை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலட்சியப்போக்கில் தங்களது மருத்துவ பணிகளை மேற்கொண்ட நபர்களை கண்டறிந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது" என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x