Published : 18 Nov 2022 04:33 PM
Last Updated : 18 Nov 2022 04:33 PM
சென்னை: "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்" என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சென்னையைப் பொறுத்தவரை 3200-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு எங்கெல்லாம் மழை பாதிப்பு ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் தாழ்வான இடங்களில் இருந்த 16 டிரான்ஸ்பார்மர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த முறை மழை பெய்தாலும்கூட மின் விநியோகம் எங்கேயும் தடைபடவில்லை. மழைக்காலங்களில் அனைத்து மின் நுகர்வோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று மின் வாரியத்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
அப்போது அவரிடம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்ப இருக்கிறோம்.
அதேநேரம், ஒரு சில இடங்களில் மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்திருந்தால், அவர்களது பெயரில் உள்ள மின் இணைப்புகள் மாற்றப்படாமல் உள்ளன. அவை குறித்து தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மின் இணைப்பு பெற்றவர்கள் இறந்து போயிருந்தால், அந்த இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக ஒரு சிறப்பு நேர்வாக அதற்கான ஏற்பாடுகளும் செய்யவுள்ளோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT