Published : 18 Nov 2022 01:28 PM
Last Updated : 18 Nov 2022 01:28 PM

திருச்சி அருகே ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்: நிதி முறைகேடுகள் நிரூபணம் ஆனதால் ஆட்சியர் நடவடிக்கை

விக்னேஷ்வரன்.

ஜி.செல்லமுத்து

திருச்சி: மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நிரூபணம் ஆன நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாநகர் அருகிலுள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன வரிவசூல், பிளான் அப்ரூவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உறுப்பினர்கள் கலெக்டருக்கு அளித்த புகாரின் பேரில் ஆட்சியர், விக்னேஸ்வரனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார் அதில், 'மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போலியான ரசீதுகள் மூலம் ரூ.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவராக பதவி ஏற்றபோது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டது. விக்னேஷ்வரனிடம் 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 205 (1) ன் கீழ் விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட வில்லை. அதனைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவுப்படி கடந்த மாதம் 7ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்திய அறிக்கையை ஸ்ரீரங்கம் தாசிலதார் குணசேகர் ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரனுக்கு ஆட்சியர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது, ''ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்தும் அதன் அறிக்கையை பரிசீலனை செய்ததில் மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் நிதி முறைகேடுகள் மற்றும் பொறுப்பிலிருந்து செயல்படாமலும் குறைபாடுகள் வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளதால் அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருப்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும், பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் விக்னேஷ்வரன் என்பவரை 1994ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205, உட்பிரிவு 11-ன்படி, 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்'' என அந்த கடிதத்தில் ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x