Published : 18 Nov 2022 11:04 AM
Last Updated : 18 Nov 2022 11:04 AM
சென்னை: "புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.
புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா? நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்பிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பாமகவினர் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு அண்மையில் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT