Published : 18 Nov 2022 06:45 AM
Last Updated : 18 Nov 2022 06:45 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாத இறுதியில் 134 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 9-ம் தேதி 136 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கேரளப் பகுதிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 138 அடியாக உயர்ந்தது. இதையடுத்து கேரளப் பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறையினர் கூறுகையில், தமிழகப் பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் வழியே விநாடிக்கு 1,600 கனஅடி நீரும், இரைச்சல் பாலம் வழியாக 1,000 கனஅடி நீர் என அதிகபட்சம் 2,600 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிட முடியும். நீர்வரத்து அதிகரித்து அவசரக்கால நேரங்களில் அதிகபட்ச நீரை கேரளப் பகுதி வழியேதான் திறக்க முடியும்.
இதனால் அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். பெரியாறு அணையில் எந்தெந்த காலத்தில் எவ்வளவு நீரை தேக்கலாம் என்ற ரூல்கர்வ் விதிமுறைப்படி நவ.30 வரை 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம். இம்முறை 142 அடி வரை நீர் தேக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.முல்லை பெரியாறு அணை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT