Published : 18 Nov 2022 09:00 AM
Last Updated : 18 Nov 2022 09:00 AM

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வழக்குப் பிரிவை கடுமையாக்குகிறது காவல்துறை

சென்னை: கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவு என்ற பிரிவிற்கு மாற்றி கடுமையாக்கியுள்ளது காவல்துறை. பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை கடுமையாக்கியுள்ளது. சந்தேக மாரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் (IPC 304 A) என்ற பிரிவிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களிடம் முறையான ஆலோசனை பெற்று மருத்துவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்த சுகாதாரத் துறை குழு அமைத்தது. இதற்கிடையில், பிரியா கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவர்கள் கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பிரியாவின் தந்தை ரவிக்குமார், ‘‘அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் காலை பெரிய அளவுக்கு கிழித்துள்ளனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால், மூட்டுப் பகுதியை இறுக்கி கட்டியுள்ளனர். அங்கு போதிய மருந்துகள் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையில், பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது வழக்குப் பிரிவை மாற்றியுள்ளது காவல்துறை.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரியா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரிழப்பு தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத் துறைக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அரசு அனைத்து வழிகளிலும் உதவும். இவை அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது’’ எனப் பதிவிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x