Published : 18 Nov 2022 06:24 AM
Last Updated : 18 Nov 2022 06:24 AM
கோவை/திருப்பத்தூர்: கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முபினின் நெருங்கிய உறவினர்கள் அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
உக்கடம் போலீஸார் இந்த வழக்கை விசாரித்த நிலையில், வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்புலம் மற்றும் இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்னர் கோவையில் 33 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த 5 பேரிடம் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்ஐஏ தற்காலிக அலுலகத்தில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.
5 பேரும் முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு தெரிந்த தகவல்கள் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். மேலும், சிறையில் உள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். காவலில் எடுக்க என்ஐஏக்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளதால், விரைவில் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பர் என தெரிகிறது.
பொறியியல் இளைஞர் இதற்கிடையே, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் அனாஸ் அலி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமீன் வேண்டி அனாஸ் அலியின் உறவினர்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, அனாஸ் அலியை டிச.1- வரை(15 நாட்கள்)சிறையில் அடைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜூலை 30-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நவ.5-ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT