Published : 18 Nov 2022 06:40 AM
Last Updated : 18 Nov 2022 06:40 AM
சென்னை: குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கலாகும் புகார் மனுக்களை நேரடியாக ரத்து செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களோ, அவர்களது சார்பில் மற்றொருவரோ அல்லது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியோ இதுதொடர்பாக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் புகார் அளிக்க குடும்ப வன்முறை தடைச் சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டப் பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி, குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் பிரிவு 482-ன்கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் நடைமுறைகள், உரிமையியல் ரீதியாக இருந்தாலும், புகார் மனுக்களை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.
இது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 482-ன்கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியுமா, முடியாதா என்ற சட்ட கேள்விக்கு விடை காணும் வகையில் இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை ரத்து செய்யக்கோரி குற்றவியல் விசாரணை முறைச்சட்டத்தின் 482-வது பிரிவின்கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது என தெரிவித்த நீதிபதிகள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து முறையாக அமர்வு நீதிமன்றத்திலும் அதன்பிறகு உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு, இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கெனவே குடும்பநல நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT