Published : 18 Nov 2022 06:48 AM
Last Updated : 18 Nov 2022 06:48 AM

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க துரித நடவடிக்கை

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான அக்டோபர் மாத சம்பளத்தை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151-ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவதில் தாமதம் நிலவிவருகிறது.

இதையடுத்து நாளை (நவ. 19) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாவட்டக் கல்வி அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக கொண்டு வரப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் பெற்றுத் தரும் வகையில் அவர்கள் விவரம் கருவூலக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாகச் சேர்ந்துள்ள அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சம்பளப் பட்டியலை கருவூல அலுவலகத்தில் உடனே சமர்ப்பித்து, ஊதியம் பெற்று வழங்க வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x