Published : 18 Nov 2022 06:15 AM
Last Updated : 18 Nov 2022 06:15 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகரை ஒட்டிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி. ஓர் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே வளாகத்துக்குள் செயல்படுகிறது. 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளிக்கு நோட்டு, புத்தகம், மின்விசிறி என சிறிய அளவில் முன்னாள்மாணவர்கள் உதவி வந்தனர்.
இந்நிலையில், மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை என்பதை அறிந்த முன்னாள் மாணவர்கள் குழு, 2 வகுப்பறைகள் கட்ட நினைத்தனர். பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் மனமுவந்து உதவ, இன்றைக்கு ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக முன்னாள் மாணவரும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவருமான ரத்தினசாமி கூறும்போது, “1950-களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. இப்பள்ளியின் வளர்ச்சி, எங்களின்வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப் பள்ளி, நடுநிலை அதைத்தொடர்ந்து உயர்நிலை என்று, இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்துள்ளது. இந்த பள்ளியோடு சுற்றுவட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூடவும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுதுகளாக வளர்ந்து நிற்கிறது.
நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது திருப்பூர் கோவில்வழி, பெரிச்சிபாளையம், கரட்டாங்காடு என மாநகரில் உள்ளவர்கள்கூட, இப்பள்ளியில் சேர்கிறார்கள். அந்தளவுக்கு, சக அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அதேபோல், பள்ளியில் போதிய மாணவர் எண்ணிக்கைக்கேற்ப, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலமாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கற்றலில் தொய்வின்றி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அருகே உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிறுவன சமுதாய பொறுப்புநிதியை பெற்று, தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இங்கு 1-ம் வகுப்பில் சேரும் குழந்தை, பள்ளிப் படிப்பு முடியும் வரை வேறெந்த பள்ளிக்கும் செல்லமாட்டார்கள்.
பள்ளியின் நன்மதிப்பும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ் 2 வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது.
இந்த பள்ளியின் கல்வித்தரத்தை ஆசிரியர்களும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள்மாணவர்களும் ஒற்றை குடையின் கீழ் காப்பாற்றுகிறோம். அதனை உணர்ந்து படிக்கும் மாணவர்களால், தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது” என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை அ.அனிதா கூறும்போது, “இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை 875பேர் படிக்கிறார்கள். 1-ம் வகுப்பு தொடங்கி 5-ம் வகுப்பு வரை 450 பேர் என மொத்தம் 1,325 பேர் படிக்கிறார்கள். தேவையான அளவில் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர்.பள்ளிக்கு ஆய்வக வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை தேவைப்படுகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்கபலமாக உள்ளனர். இதனால், திருப்பூர் மாநகரில் இருந்துகூட இங்கு வந்து படிக்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT