Published : 12 Nov 2016 10:20 AM
Last Updated : 12 Nov 2016 10:20 AM

உள்ளாட்சி 38: கட்சிகள் வெளியேறினால் மட்டுமே கூட்டுறவு அமைப்பில் ஜனநாயகம் தழைக்கும்!

வலியுறுத்துகிறார் பேராசிரியர் பழனிதுரை

தமிழகத்தில் சுமார் 50 ஆண்டு காலம் கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக இயங்கின. விவசாயிகள், நெசவா ளர்கள், மீனவர்கள், அனைத்து வகை தொழிலாளர்கள், மகளிர் என பெரும்பாலான மக்கள் கூட்டுறவு அமைப்புகளில் இருந்தார்கள். மக் களையும் கூட்டுறவு அமைப்புகளை யும் பிரிக்கவியலாத படி ஒரு பந்தம் நிலவியது. சொல்லப்போனால் 1960 மற்றும் 70-களில் தமிழகத்தின் வறுமை யைப் போக்கியது கூட்டுறவுச் சங்கங்கள் என்றும் சொல்லலாம். இதற்கு தனது குடும்பமே சாட்சியமாக இருக்கிறது என்கிறார் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியரும் உள்ளாட்சிகள் ஆய்வாளருமான பழனிதுரை. மேலும் தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகள் எப்படி சிதைந்துப்போயின என்பதையும் விவரித்தார்:

“கூட்டுறவு அமைப்புகள் அனைத் தும் பஞ்சாயத்து அமைப்புகளைப் போல மக்கள் அமைப்புகள். ஒன்றுக் கொன்று தொடர்புடைய பங்காளி அமைப்புகள். அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அத்தனைப் பேரின் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டிய அமைப்புகள். இவை மக்களாட்சியை விரிவுப்படுத் தும். கிராம சபையில் வாக்காளர் களைப் போல அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமே அவர்களின் சங்க நடவடிக்கைகளில் தலையிட முடியும். கூட்டுறவு அமைப்புக்குத் தொடர்பு இல்லாதவர்கள் தலையிட முடியாது. உறுப்பினர் அல்லாதவர் தலையிட முடியாது. அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. அது ஒரு மக்கள் இயக்கம். கிராம சமுதாய இயக்கம்!

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தது. அப்போது எங்கள் குடும்பத்துக்கு கடன் உதவி செய்தது தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக் கோட்டை ஊரின் மேலக்காடு கூட்டுறவுச் சங்கம். விவசாய இடு பொருட்கள் வழங்கியது. உபகரணங் கள் வழங்கியது. விவசாயம் செய்தோம். விளைபொருட்களைக் கூட்டுறவுச் சங்கமே பாதுகாத்தது. விற்பனை செய்துகொடுத்தது. படிப்படியாக வறுமையில் இருந்து மீண்டதுடன் எங்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது அந்தக் கூட்டுறவுச் சங்கம். ந.சு.சபாபதி என்பவர்தான் அதன் தலைவராக இருந்தார். தனது நேர்மையான செயல்பாடுகளால் மீண்டும் மீண்டும் பலமுறை அவரே தேர்வு செய்யப்பட்டார். அரசியல் கட்சியினரை அவர் உள்ளே அனுமதித்ததே இல்லை. எங்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கினார்.

தமிழகத்தில் 1932-ம் ஆண்டு சென்னை கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. விவசாயத்துக்கு நிதி உதவிகளை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி 1951-ம் ஆண்டு ‘கோர்வாலா’ கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி 1954-ம் ஆண்டு அளித்த பரிந்துரை களின் அடிப்படையில் 1961-ல் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் இயற்றப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘சந்தானம்’ கமிட்டி உள்ளிட்ட கமிட்டிகள் அமைக்கப்பட்டு கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட உதவின. 1983 மற்றும் 88-ல் விதிமுறைகளில், சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

1976-ல்தான் முதன்முதலாக அதி காரிகள் வழியாக அரசியல் கட்சிகள் கூட்டுறவு அமைப்புகளுக்குள் நுழையத் தொடங்கின. காரணம், ஓட்டு அரசியல். கூட்டுறவு சங்கங்களில் ஏராளமான விவசாயிகள், நெசவாளர், தொழிலாளர்கள் குவிந்துகிடந்தார்கள் அல்லவா. அவர்களையும் கூட்டுறவுச் சங்கங்களையும் பிரிக்க முடியாமல் இருந்தது. கூட்டுறவுச் சங்கங்கள் அவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக விளங்கின. இது கட்சிகளின் கண்ணை உறுத்தியது. உள்ளே நுழைந்தார்கள். கட்சிகள் சாயம் பூசப்பட்ட, கட்சிகளின் பின்னணி கொண்ட ஆட்கள் கூட்டுறவு தேர்தல்களில் போட்டியிட்டார்கள். கலவரங்கள் வெடித்தன. அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால் ஜனநாயக அமைப்பு குலைந்தது. ஊழல் பெருகின. கட்சிகள் பாகுபாடு இல்லாமல் தமிழக கூட்டுறவுக் கழகங்களை சீரழித்தன.

கூட்டுறவுச் சங்கங்களில் அரசியல் கட்சியினர் உறுப்பினர்களாக்கப்பட் டார்கள். விவசாயிகள், நெசவாளி கள், தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டார்கள். கூட்டுறவுச் சங்க உறுப் பினர் சேர்க்கைக்கு சட்டசபையில் அவசர சட்டமெல்லாம் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பலமுறை தேர்தல் நடத்தப்பட்டு, பலமுறை நிர்வாகக் குழு கலைக்கப்பட்டது. உதாரணத்துக்கு, 1996-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஐந்து ஆண்டுகள் நிர்வாகக் குழு இருந்தது. 2001-ல் கலைக்கப்பட்டது. தமிழகத்தில் அந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிர்வாகக் குழு முழுமையாக நடந்தது என்று சொல்லலாம். அதற்கு முன்பும் பின்பும் சுமார் 25 ஆண்டுகாலம் கூட்டுறவு அமைப்புகள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியாது.

ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழுக்களைக் காலால் எட்டி உதைத்து பந்தாடின மாநில அரசுகள். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் ‘சட்டப் பிரிவு 33’ கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கும் அத்தனை அதிகாரங்களும் உதாசினப்படுத்தப்பட்டன. மாநில அரசுகளின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 89(1) மூலம் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்பட்டன. தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. 2000-களின் தொடக்கத்தில் கூட்டுறவுச் சங்கங் களில் மட்டும் மக்கள் முதலீட்டுப் பணம் ரூ.21 ஆயிரம் கோடி இருந்தது. அது அப்படியே முடங்கியது. முதலீட்டுக்கு சரியான வட்டியைக் கொடுக்க முடியவில்லை. ஏழைகள் தொடங்கி வசதியானவர்கள் வரை கூட்டுறவை நம்பியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். மிக அதிகளவில் பாதிக்கப்பட்டது விவசாயிகளே.

ஆனால், ஒரு வெளிச்சக் கீற்றுப் போல 2008-ல் கூட்டுறவு அமைப்பு களை சீரமைக்கும் நோக்கத்தில் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசர சட்டமானது, கூட்டுறவு சங்கப் பொதுக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவுக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. அதிகார வரம்பையும் விரிவுப்படுத்தியது. நிர்வாகக் குழுவை மாநில அரசு நினைத்தபோதெல்லாம் கலைக்க முடியாது என்று சொன்னதுடன் எப்போதெல்லாம் நிர்வாகக் குழுக்களைக் கலைக்கலாம் என்பதையும் வரையறுத்தது. அதாவது, தொடக்க நிலை கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கினால் கலைக்கலாம். ஊழல் பெருகினால் கலைக்கலாம். பொதுக் குழுக் கூட்டம் தொடர்ந்து மூன்றுமுறை நடத்த முயற்சி செய்து, அதற்கான உறுப்பினர் கோரம் கூட்ட முடியவில்லை என்றால் கலைக்கலாம் என்றது.

மேலும், அனைத்து கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர் நியமனம், பதவி உயர்வு, ஊதியம், ஊதிய உயர்வு, நிதி நிர்வாகம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மட்டுமே நடத்தப்படும் என்று அந்தச் சட்டம் கூறியது. குறிப்பாக, கூட்டுறவு அமைப்புகளில் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் தலையிடக் கூடாது என்று கண்டிப்புடன் குறிப்பிட்டது. ஆனால், சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் கூட தமிழகத்தின் கூட்டுறவு அமைப்புகள் தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதுதான் விநோதம். அதன் பின்பு அந்தச் சட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

கிராமப்புற விவசாய கூட்டுறவு வங்கிகள் பல படிப்படியாக அழிந்தன. கிடைத்தவரை லாபம் என்று அதிகாரிகள் விவசாயிகளின் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடினார்கள். பல இடங்களில் வங்கிகள் மூடப்பட்டன. சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கங்களில் கோடிக்கணக்கில் பணத்தை அதிகாரிகள் ஊழல் செய்தார்கள். ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்தன. சிலர் தண்டிக்கப்பட்டார்கள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பலர் தப்பினார்கள். 4,400 தொடங்க நிலை கூட்டுறவுச் சங்கங்களில் 1,100 சங்கங்கள் இப்படி அழிந்தன. எல்லாவற்றுக்கு மேலாக, சீரழிவின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்தது. ஓட்டு வங்கியை மட்டுமே குறிவைத்து மக்கள் பணம் சூறையாடப்பட்ட சம்பவம் அது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த சம்பவம் அது. 2006-ம் ஆண்டு ரூ.6,800 கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார்கள்.

இதனால், ஏழை விவசாயிகள் பலன் அடைந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஏழை, குறு விவசாயிகளைவிட பெரிய, வசதியான விவசாயிகள்தான் பெரிதும் பலன் அடைந்தார்கள். டெல்டா மாவட்டங்களில் நிலசுவான்தார்கள் போலிருந்த பெரிய விவசாயிகளின் லட்சக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் வசதி படைத்த அரசியல்வாதிகளும் அடக்கம். ஏற்கெனவே அழிய தொடங்கியிருந்த கூட்டுறவு வங்கிகள் அதள பாதாளத்துக்குச் சென்றன. மக்கள் முதலீட்டுக்கு வட்டி கொடுக்க முடியாமல் வங்கிகள் திவாலாகின. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்க் குரல்கள் ஒலித்தன. ஆனால், அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை. போராட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிச்சையிடுவது போல கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தது.

இவ்வளவு நெருக்கடிகளுக்கும் சீரழிவுகளுக்கு இடையிலும் தமிழகத் தில் ஒருசில முன்னோடி கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. அதற்குக் காரணம், அங்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்கும் செயலாளர்கள். ஒட்டுமொத்தமாக அதிகாரிகளையும் குறை சொல்ல இயலாது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு, கூட்டுறவு அமைப்புகளில் நிர்வாகக் குழு நடைமுறையில் இருந்தாலும் ஜனநாயகம் அங்கே இல்லை. கட்சிகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே கூட்டுறவு அமைப்புகளில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும்.”

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x