Published : 18 Nov 2022 07:53 AM
Last Updated : 18 Nov 2022 07:53 AM
சென்னை: சென்னை கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கூவம் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாக பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து,விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பாசத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடுவதைதடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும்பணிகளை சென்னை குடிநீர் வாரியம் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அவை மாசுபடுத்தப்படுகிறதா என கண்காணிக்கவேண்டும். இந்த நீர்வழித் தடங்களில் நீரின் தரத்தை பரிசோதித்து, உயர்த்த வேண்டும்.அவற்றில் மிதக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும்.
இந்த 3 நீர்வழித் தடங்களிலும் குப்பைகள் கொட்டுவதையும், ஆக்கிரமிப்பதையும் தடுக்க வேண்டும். தவறு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் தொடர்புடைய துறைகளுக்கு ஆதரவாக இருந்து, ரோந்து பணிகளை மேற்கொண்டு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT