Published : 04 Nov 2016 09:58 AM
Last Updated : 04 Nov 2016 09:58 AM
தேசத் தந்தை மகாத்மா காந்தி நிறுவிய தக்கர் பாபா வித்யாலயா கல்வி நிறுவனம் சென்னை தி.நகரில் உள்ளது. கடந்த 84 ஆண்டுகளாக, மிகக் குறைந்த கட்டணத்தில் பணித்திறனுடன் கூடிய கல்வியை வழங்கி, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்காகவே இயங்கி வருகிறது இப்பள்ளி. இதை தக்கர் பாபா சமிதி நிர்வகித்து வருகிறது. இதன் கவுரவ செயலாளராக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்காக துடிப்புடன் பணியாற்றி வருகிறார் 95 வயது ‘இளைஞரான’ காந்திய வாதி ஸ்தாணுநாதன்.
ரயில்வே பணி
சிறுவயது முதலே கல்வியில் மிகச் சிறந்து விளங்கியவர். அரசு உதவித் தொகையில் படித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் இயற்பியலில் முதுகலைப் படிப்பை முடித்தார். இவரது கல்வி, அறிவுத் திறன் அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்விலும் வெளிப் பட்டது. 1944-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 10-வது இடம் பெற்று, ரயில்வே போக்குவரத்து (டிராஃபிக்) பணியில் சேர்ந்தார்.
துணை போக்குவரத்து கண் காணிப்பாளராகத் தொடங்கி, மைசூர் மண்டல ரயில்வே மேலா ளர், தென்கிழக்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர், கல்கத்தா ரயில் வாரிய இயக்குநர் என்று 35 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து, இந்திய ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினராக தனது ரயில்வே பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.
ரயில்வே போக்குவரத்துப் பிரி வின் விசாரணைக் குழு உறுப்பினர், ரயில் கட்டணம் தொடர்பான தீர்ப் பாய உறுப்பினர் ஆகிய பொறுப்பு களையும் வகித்துள்ளார். ரயில் கட்டண விதிப்பில் நிபுணராகப் போற்றப்படும் இவர், ‘ரயில்வே பொருளாதாரம்’ எனும் நூலையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இசை, கலை, இலக்கியத் துறையிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவர். இதன் காரணமாக, மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார்.
காந்திய வாழ்க்கை
இவை அனைத்தையும் தாண்டி, தனிச் சிறப்பாகப் போற்றப்படுவது இவரது காந்திய வாழ்க்கைதான். விளம்பர வெளிச்சத்தை சற்றும் விரும்பாதவர். இன்று 95 வயதை நிறைவு செய்து, 96-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஸ்தாணு நாதன், சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்திலேயே வசித்து வருகிறார். எளிய வாழ்க்கை, உயரிய எண்ணம் என்ப தையே தன் வாழ்நாள் கொள்கை யாகக் கொண்டவர். விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, தனது பணிக்காலம் முழுவதும் மட்டுமின்றி, அதன் பிறகும் தொடர்ந்து, இன்று வரை கதராடை மட்டுமே அணிகிறார்.
மது ஒழிப்புக்கு குரல்
கல்வி, வேலைவாய்ப்பு மூலமாக மட்டுமே நலிந்த பிரிவினரின் முன் னேற்றம் சாத்தியமாகும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி, அதற் காகப் பாடுபட்டு வருகிறார். லட்சக் கணக்கான ஏழை, எளியவர்கள், கிராம மக்கள், உழைப்பாளிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண் டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
காந்திய சிந்தனையின் நேர்மறை அணுகுமுறையான கிராமத் தொழில்கள் நசிந்துவிடா மல் பாதுகாக்கப்பட வேண்டும்; வலுவாக்கப்பட வேண்டும் என்பதை எல்லாத் தளங்களிலும் மிக அழுத்த மாகப் பதிவுசெய்து வருகிறார்.
தலித்களுக்கு எதிரான தீண் டாமைக் கொடுமையை முழு மூச்சு டன் எதிர்த்து வருகிற ஸ்தாணு நாதன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் நடத்திய ஏ.வைத்தியநாத ஐயரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக் கது.
இந்த தள்ளாத வயதிலும் தக்கர் பாபா வித்யாலயா, ஹரிஜன் சேவா சமிதி மூலம், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் நலன், உயர்வுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT