Published : 24 Jul 2014 09:23 AM
Last Updated : 24 Jul 2014 09:23 AM
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையின்போது விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலையில் முறைகேடு நடப்பதாக “தி இந்து” நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காஞ்சி நகர பகுதிக ளில் உள்ள ரேஷன் கடைகளில் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் 2014-ம் ஆண்டுக் கான இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், 63,724 பயனாளிகளுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அரசின் இலவச வேட்டி மற்றும் சேலை கிடைக்கப்பெறாத பயனாளி களுக்கு 19-ம் தேதி சனிக்கிழமை முதல் ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் அறிவித்தனர். மேலும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வேட்டி, சேலை ஆகிய இரண்டும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப தலைவர் இல்லாத குடும்ப அட்டைகளுக்கு வேட்டியும் மற்றும் குடும்ப தலைவி இல்லாத அட்டைகளுக்கு சேலையும் வழங்கப்படாது என கூறி பயனாளிகளுக்கு ஏதேனும் ஒன்றை மட்டும் வழங்குவதாக புகார் எழுந்தது. அதனால், குடும்ப அட்டைகளுக்கு வேட்டி, சேலை கிடைக்காமல் பயனாளிகள் பாதிக்கப்படுவதாக “தி இந்து” நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் சந்திரன், திருக்காளிமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடை எண் இரண்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை என கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை வட்டாரங்கள் கூறியதாவது, “மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் ஒன்று மட்டும் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, வழங்கப்படாமல் உள்ள மற்றொரு பொருளை வீடுகளுக்கு சென்றோ அல்லது அவர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்து ரேஷன் கடையிலோ வழங்க வேண்டும் என, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT