Published : 17 Nov 2022 06:14 PM
Last Updated : 17 Nov 2022 06:14 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சுகாதாரத் துறையினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடியல் பெற்றுள்ளனர். விருப்பத்திற்கேற்ப வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. சுகாதாரத் துறையில் 136-வது அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் புத்தகமாக வெளியிடப்படும்.
136-வது அறிவிப்பாக தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்துகளின் தரம் உறுதி செய்வதற்கான பரிசோதனை நடைபெற உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் சோதனை செய்ய திட்டம் துவக்கப்படுகிறது.
நாமக்கல்லில் ஒரு சித்தா மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. மிக விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைய உள்ளது. பழனியில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைய உள்ளது. திருவண்ணாமலை அடிவாரத்தில் ஓரிரு மாதத்தில் சித்தா மருத்துவமனை அமைய இருக்கிறது. அதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
சித்தா பல்கலைக்கழகத்திற்கான ஒப்புதலுக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும். சித்த பல்கலைக்கழகத்திற்காக மாதவரம் பகுதியில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையும் கண்டுகொள்ளாத பிரிவாக சித்தா பிரிவு இருந்து வந்தது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கியதும் புதிய பாடப் பிரிவு துவங்கப்படும். சித்த மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை. இந்த புகாருக்கு உரிய விசாரணை நடத்தி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரியாவின் உயிரிழப்பு என்பது ஏற்க முடியாத ஒன்று. அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தி தணிக்கை குழு அமைக்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT