Published : 17 Nov 2022 05:11 PM
Last Updated : 17 Nov 2022 05:11 PM
சென்னை: "இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் சென்னை அளவில் ஒரு மிகப் பெரிய கால்பந்தாட்ட போட்டியை நடத்தப் போகிறோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவி பிரியா உயிரிழந்தார். இதையொட்டி வியாசர்பாடி பகுதியில் உள்ள பிரியாவின் வீட்டிற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பிரியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதன்பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சகோதரி பிரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழப்பு. ஒரு பெரும் கனவை சுமந்துகொண்டு கால்பந்தாட்ட வீராங்கனையாக இருந்த பிரியா, தவறான ஒரு சிகிச்சை கொடுத்ததன் காரணமாக காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
அதன்பிறகு, அவர் இறந்தது போன்ற ஒரு நிகழ்வை நம் மாநிலத்தில் நான் இதுவரை பார்த்தது கிடையாது. குறிப்பாக மருத்துவக் கட்டமைப்பு என்பது இந்தியாவிலேயே மிக ஆழமாக மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. சம்பவம் நடந்த மருத்துவமனை முதல்வரின் தொகுதியில் இருப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.
தமிழக அரசு என்னதான் தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலும்கூட இன்று பல அரசு மருத்துவமனைகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. பிரியாவின் இறப்பு ஊடகங்களின் மூலம் வெளியே வந்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று பேசப்படுகிறது. எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாக கோளாறுகள் காரணமாக நிகழும் பல இறப்புகள் வெளியே வருவதில்லை. அவற்றை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழகத்திற்கென்று மருத்துவ துறையில் இருந்த பெயரை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அதனால்தான் பாஜக சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தோம்.
கட்சி சார்பில், சில விஷயங்களை பிரியாவின் பெற்றோர் சம்மதத்துடன் பாஜக செய்யப்போகிறது. தனது மகள் பிரியாவுக்கு பாரதப் பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருந்ததாகவும், நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக பின்னர், பிரதமரிடம் அழைத்து செல்ல வேண்டும், என்னுடைய பதக்கங்களைக் காட்டி அவருடைய ஆசியை வாங்க வேண்டும் என்று கூறியதாக, பிரியாவின் தந்தை என்னிடம் கூறினார். மேலும், ஒரு தந்தையாக அதை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் 5 நாட்களில் இரண்டு விஷயங்களை செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னையில், தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மழைக் காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில், சென்னை அளவில் ஒரு மிகப்பெரிய கால்பந்தாட்ட போட்டியை நடத்தப்போகிறோம். இந்த விழாவிற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள கால்பந்தாட்ட வீராங்கனைகள் சிறப்பிக்க உள்ளோம்.
மேலும், கால்பந்தாட்ட வீரர்களான பிரியாவின் சகோதரர்கள் பரிந்துரைக்கும் 10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கி அவர்கள் விரும்பும் கால்பந்தாட்ட அகாடமியில் சேர்க்கப்படுவர். அதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக்கொள்ளும். ஒரு பிரியா இறந்துவிட்டார், ஆண்டுதோறும் 10 பிரியாக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆக்கபூர்வமான நிகழ்வை கையில் எடுக்கிறோம். பிரியாவின் பெயரில் ஒரு கால்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டிலிருந்து சென்னையில் நடத்தப் போவதாக பிரியாவின் பெற்றோரிடம் உறுதிமொழி அளித்துள்ளேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT