Published : 17 Nov 2022 01:18 PM
Last Updated : 17 Nov 2022 01:18 PM
சென்னை: "எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அதிமுக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. நகர்ப்புற, ஊராட்சி தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கு படிவங்களைக்கூட அதிமுகவால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சுதந்திரமான இயங்கக்கூடிய இயக்கம். நாங்கள் யார் உடனாவது கூட்டணிதான் போகமுடியும் என்றுதான் ஏற்கெனவே கூறியிருந்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுகவை எதிர்க்க வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அவ்வாறு செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தேன்.
இந்த மெகா கூட்டணி என்பவர்கள், அடுத்தவர்களை தரம்தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் நான் கூறினேன். கால் சதவீதம் அல்ல அரைக்கால் சதவீதம்கூட பழனிசாமியுடன் கூட்டணிக்குச் செல்வேன் என்று நான் எங்கேயும் கூறியது இல்லை.
அதிமுக கூட்டணிக்கு செல்வீர்களா என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் கேட்கப்படுகிறது. இன்றைக்கு அதிமுக என்பது ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. ஒரு கட்சி சின்ன கட்சியோ, பெரிய கட்சியோ, நாளைக்கே ஒரு இடைத் தேர்தல் வந்தால், அந்த கட்சி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளருக்கு சின்னம் கொடுக்கக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள். ரவீந்திரன் துரைசாமி வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு அதிமுக தலை இல்லாத முண்டமாக உள்ளது. நான் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டியுள்ளது. என்னை தேவை இல்லாமல் இழுத்ததால், நான் அந்த வார்த்தையை சொல்ல வேண்டியுள்ளது.
எனக்கு தெரிந்தவரை எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அந்த கட்சி இன்று தலையில்லாத முண்டமாக இருப்பதால், மெகா கூட்டணி என்ற வார்த்தையை சொல்கிறார். அந்த கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. நகர்ப்புற, ஊராட்சி தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கு படிவங்களைக்கூட அதிமுகவால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
ஒரு இடைத்தேர்தலோ, அல்லது தேர்தலோ வந்தால் அந்த கட்சிக்கு படிவம் "ஏ" மற்றும் "பி" யார் கொடுக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன் அந்த கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. மீண்டும் சொல்கிறேன் திமுக என்ற தீயசக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...