Published : 17 Nov 2022 11:32 AM
Last Updated : 17 Nov 2022 11:32 AM
சென்னை: "என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறெதுவும் குறையில்லை, என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் எங்களது வருத்தம்" என்று உயரிழந்த மாணவியின் தந்தை ரவிக்குமார் கூறியுள்ளார்.
தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியா கடந்த நவம்பர் 15-ம் தேதி உயிரிழந்தார். இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறியது: "என் மகள் பிரியா இறந்துவிட்டாள். முதல்வர் என்னிடம், நம்ம பிரியாவை போல நிறைய குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு காலணியையோ, மற்ற உபகரணங்களையோ வாங்கிக் கொடுங்கள். பிரியாவின் ஆத்மா சாந்தி அடையும்'' என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ''எங்களது வீட்டை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு வந்து பார்த்தனர். வீடு ஒழுகிய நிலையில் இருந்ததைப் பார்த்தனர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கொண்டு சென்று, எங்களுக்கு வீடு வழங்கியுள்ளனர். அதற்காக முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறெதுவும் குறையில்லை, என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் எங்களது வருத்தம். எங்கள் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவியும் எங்களுக்காக இரவு பகலாக வந்து ஆறுதல் கூறினார். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தைரியம் கொடுத்தார். மருத்துவமனையிலும், வீட்டிலும் வந்து தவறாமல் பார்த்துக் கொண்டார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT