Published : 17 Nov 2022 08:58 AM
Last Updated : 17 Nov 2022 08:58 AM

டேன்டீ விவகாரம்: கூடலூரில் நவ.20-ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: நீலகிரி தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெறியேற்றப்படுவதை கண்டித்து நவ.20-ல் கூடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் இலங்கையில் இருந்து மீள்குடியேற்றப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் தமிழக அரசின் டேன்டீ-ஐ மட்டுமே நம்பி வாழ்கின்றனர். ஆனால் டேன்டீ நிர்வாக இயக்குநர், அந்நிறுவனத்துக்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, டேன்டீ வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, நடுவட்டம், வால்பாறை, குன்னூர், கோத்தகிரி, பாண்டியர், சேரங்கோடு, நெல்லியாளம், சேரம்பாடி கோட்டங்கள் என மொத்தம் 2152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என டேன்டீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார். நிர்வாக இயக்குநரின் கூற்றுப்படி, இந்த நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டால், டேன்டீ நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5.98 கோடி மிச்சமாகும்.

இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அகதியாக்கப்படுகின்றனர். டேன்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு கடந்த அக்டோபர் 3-ம் தேதி அரசாணையை வெளியிட்டது. அரசின் இந்த முடிவால் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், டேன்டீ நிறுவனத்தால் வழங்கப்பட்ட அகதிகளுக்காக கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு தற்போது நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதேபோல் தாமாக முன்வந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, வெளியேறும் போது கொடுக்கப்படவேண்டிய நிவாரணங்களும் அரசால் கொடுக்கப்படவில்லை. இந்திய நாட்டை நம்பி வந்த அகதிகளுக்கு வேறு எங்கு செல்லவும் வாய்ப்புகளும் இல்லை. மக்கள் கேள்வி கேட்டால், அரசு அதிகாரிகள் தொழிலாளர்களை அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு டேன்டீ நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வழக்கம் போல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, தமிழக அரசு அவர்களை அகதிகளாக்கியுள்ளது. அந்தவகையில், தமிழ் மக்களை வஞ்சிக்கும் இந்த திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் வருகிற நவம்பர் மாதம் 20-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும். அதில் நானும் நேரடியாக் கலந்துகொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x