Published : 17 Nov 2022 05:20 AM
Last Updated : 17 Nov 2022 05:20 AM

நாட்டின் முதல் இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைகிறது

இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றான மருத்துவ மாணவர் விடுதி.

நாட்டிலேய முதல் முறையாக, இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைகிறது. சுமார் 7.6 ஏக்கர் பரப்பில், தலா 9 மாடிகள், 160 நீதிமன்ற வளாகங்களுடன் இது கட்டப்படுகிறது.

1892-ல் இந்தோ-சார்சனிக் முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வளாகம் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டப்பட்டது.

தற்போது உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால் தற்போது 54 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பாதி பேர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றி வருகின்றனர். எனினும்,சென்னை உயர் நீதிமன்றத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதனால், தற்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும்,பெருநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள், சிபிஐநீதிமன்றங்கள், போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றங்களை இடம்மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகை, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அல்லிகுளம், ஜார்ஜ்-டவுன், ஆலந்தூர் மற்றும் பூந்தமல்லியிலும் உரிமையியல் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவை தவிர்த்து, எழும்பூர், ஜார்ஜ் டவுன், ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டையில் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன.

இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையம் அருகே, டிஎன்பிஎஸ்சி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிக்கு எதிரே, பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான 3.6 ஏக்கர் விளையாட்டு மைதானம் மற்றும் 4 ஏக்கரில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி என, மொத்தம் ரூ.700 கோடி மதிப்பிலான 7.6 ஏக்கர் இடத்தை தமிழக அரசு, நீதித் துறைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இங்கு ரூ.315 கோடி மதிப்பில், தலா 9 அடுக்குமாடிகளுடன் கூடிய இரட்டைக் கோபுர ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. எனினும், தற்போது 4 ஏக்கரில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருவதால், அந்தக் கட்டிடத்தை இடித்த பிறகே பணிகளை தொடங்க முடியும்.

இதுகுறித்து வழக்கறிஞர் டி.நிக்சன் கூறும்போது, ‘‘இரட்டைக் கோபுர ஒருங்கிணைந்த அடுக்குமாடி நீதிமன்றக் கட்டுமானப் பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்கும் வகையில், துரிதப்படுத்த வேண்டும். இது இரட்டைக் கோபுரங்களுடன், நாட்டிலேயே முதல் பன்னடுக்கு நீதிமன்ற வளாகம் என்ற பெருமையைப் பெறும்’’ என்றார்.

வழக்கறிஞர் எஸ்.சாந்தி கூறும்போது, ‘‘குற்றவியல் நீதிமன்றங்களை தனியாகப் பிரித்து, உரிமையியல் நீதிமன்றங்களை ஒருங்கிணைந்த வளாகத்துக்கு மாற்றினால் சிறப்பாக இருக்கும். நிறைய நீதிமன்றங்களில் கழிப்பறைகள், குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு தனித்தனி வழிகள் இருப்பதில்லை. கழிப்பறைகள் அருகே செயல்படும் நீதிமன்றங்களில் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, குடும்ப நல நீதிமன்றத்தில் பலஇடங்களில், மேல்தளத்தில் உள்ள கழிப்பறை தண்ணீர் கசிந்து, கீழே சொட்டு, சொட்டாக வடிகிறது.

பெண் வழக்கறிஞர்களுக்கு போதுமான சேம்பர்கள் ஒதுக்கப்படுவதில்லை. பார்க்கிங், போக்குவரத்து நெருக்கடி பிரச்சினையும் உண்டு. எனவே, தலா 9 மாடிகள் கொண்ட புதிய வளாகத்தில், பாதுகாப்பு குளறுபடிகள் இல்லாத வகையில் நீதிமன்றங்களை ஒதுக்க வேண்டும். மேலும், பிராட்வே பேருந்து நிலையம் அருகே அடுக்குமாடிக் கட்டிடங்கள் அமைய உள்ளதால், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகமாக இவற்றைக் கட்ட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x