Published : 17 Nov 2022 06:37 AM
Last Updated : 17 Nov 2022 06:37 AM

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாடு முழுவதும் நவ.19-ல் வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வங்கி ஊழியர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், பின்னாளில் சில வங்கிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த 2005-ம் ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் - இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி, எந்த வங்கிக் கிளைகளில் கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை, ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கிக் கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம், அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி, ஊழியர்களை வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். பணம் கொண்டு செல்லும் ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக அயல்பணி மூலம் தனியாருக்கு வழங்க சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையருடன் கடந்த 10-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று, தற்போது (நேற்று) வங்கிகள் கூட்டமைப்புடன் மும்பையில் மீண்டும் ஒரு சுற்று பேச்சு நடந்தது. இதில், எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. எனவே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x