Published : 17 Nov 2022 06:52 AM
Last Updated : 17 Nov 2022 06:52 AM

காங்கிரஸ் தலைைம அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரம்: ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு?

காங்கிரஸ் மாவட்ட செயலர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், எம்பிக்கள் ஜெயக்குமார், விஜய் வசந்த், எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர். படம் : பு.க.பிரவீன்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மோதல் விவகாரம் தொடர்பாக கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுதொடர்பாக விசாரிக்க வரும் 24-ம் தேதி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடுகிறது.

தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது, அதற்காக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைபயணம் முடிவதற்குள், 234 தொகுதிகளிலும் தலா 100 வீதம் மொத்தம் 23,400 கொடிக் கம்பங்களை, கல்வெட்டுடன் நடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின்போது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்திபவன் வளாகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை மாற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.

கூட்டம் முடிந்து கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியில் செல்லும்போது, அவரை முற்றுகையிட்டனர். இவர்கள் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த முற்றுகையின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பானது.

இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 77 மாவட்டத் தலைவர்களில் 63 பேர் பங்கேற்று, ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கே.எஸ்.அழகிரியிடம் வழங்கினர்.

பின்னர், கட்சியின் தேசிய செயலர் வல்ல பிரசாத், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் தலைமையில், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் இத்தீர்மானம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.ஆர்.ராமசாமி கூறும்போது, “கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம், வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. அதில் உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார்.தினேஷ் குண்டுராவ் கூறும்போது, “ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே, சத்தியமூர்த்திபவன் மோதலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x