Published : 05 Nov 2016 10:50 AM
Last Updated : 05 Nov 2016 10:50 AM
உயர்க் கல்வி திட்டத்துக்கு தேவை உள்ளாட்சிக் கல்வி... வலியுறுத்துகிறார் உள்ளாட்சிகள் ஆய்வாளர் பழனிதுரை
உள்ளாட்சியின் மூன்று அம்சங்களாக நேரு குறிப்பிட்டவை பஞ்சாயத் துக்கள், கல்வி நிலையங்கள், கூட்டுறவு அமைப்புகள். இதில் கல்வி நிலையங்கள் என்பவை வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமே செயல்படக் கூடாது என்றார் நேரு. அவை சமூகக் கூடங்களாக வும் இயங்க வேண்டும் என்றார் அவர். சமூகப் பார்வையைக் கற்றுத் தர வேண்டும் என்றார். கல்வி நிலையங்கள் காலை முதல் மாலைவரை கல்வியைக் கற்றுத் தர வேண்டும். மீதமுள்ள நேரத்தில் முதியோருக்குக் கல்வி கற்றுத் தர வேண்டும். சுத்தம், சுகாதாரத்தை கற்றுத் தர வேண்டும். நீர் நிலைகளைப் பாரமரிக்கக் கற்றுத் தர வேண்டும். கிராமங்களில் வாழ்வாதாரங்களை மேம்படுத்த கற்றுத் தர வேண்டும். வறுமையை ஒழிக்க கற்றுத் தர வேண்டும். அரசியல் கற்றுத் தர வேண்டும். கிராம சபையைப் பற்றி சொல்லித் தர வேண்டும். மக்களுக்கான அதிகாரங்களைச் சொல்லித் தர வேண்டும் என்று மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார் நேரு. ஆனால், இன்றைய கல்வியில் அதெல்லாம் இல்லை. இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் க.பழனிதுரை.
“இன்று படிப்பை முடித்த மறுநாளே வேலை வேண்டும்; அதிக சம்பளம் வேண்டும்; குறுகிய காலத்தில் வீடு, கார் வாங்க வேண்டும். அதற்கான கல்வி மட்டுமே போதும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, முழுமையாக வணிகமயப்படுத்த கல்வியைக் கேட்கிறார்கள். அந்தக் கல்வியில் அவர்களுக்கு சமூகப் பார்வை தேவையில்லை. அரசியல் பார்வை தேவையில்லை. அடிப்படை மனித மாண்புகள் தேவையில்லை. அதனால்தான், தனியார் கல்வி நிறுவனங்களும் வேலைக்கும் உத்தரவாதம் அளித்து கல்வி வணிகம் செய்கின்றன.
உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் எதற்கும் ஒரு விலையை நிர்ணயித்துவிட்டது. அது பணம் ஈட்டும் கருவியாக மட்டுமே கல்வியைப் பார்க்கிறது. பொது சமூகம் இதற்கு உடன்பட்டுவிட்டது, பழகிவிட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது முதலீடு செய்கிறார்கள். ஆனாலும்கூட அந்த முதலீட்டுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப் பதுபோல வேலைவாய்ப்பை வழங்குவ தில்லை. குறிப்பாக, விரிவாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் தொழில்திறன், தொழில் நுட்பத்திறன் கூட்டப்பட்டவர்கள்தான் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யத்தான் அனைவரும் சிந்திக்கின்றனர். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யத்தான் இன்றைக்கு உயர்க் கல்வித் துறையில் 765 பல்கலைக்கழகங்கள், 39 ஆயிரம் கல்லூரிகள், 11 ஆயிரம் உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. 80 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத கல்வி நிலையங்களின் எண்ணிக்கை வளர்ச்சி. இவ்வளவு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டபோதும், சந்தைக்குத் தேவையான ஆற்றலை மாணவர்கள் மத்தியில் வளர்த்து அவர்களை வெளியில் அனுப்ப முடியவில்லை. ஏன்?
காரணம், உயர்க் கல்வியில் கல்விக்கூடங் களுக்கும் தொழில்கூடங்களுக்கும் உயிரோட் டமான தொடர்பு இல்லை. உலகமயமாக்கப்பட்ட சூழலில் நமது நாட்டின் வளர்ச்சியை மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நமக்கு இது மிகவும் முக்கியமான பிரச்சினை. ஆனாலும், நமது ஆட்சியாளர்கள் கல்விக் கொள்கையை உருவாக்கும்போதும் இதனை கவனத்தில்கொள்ளவில்லை. இதோ இந்தக் கல்விக் கொள்கையிலும்கூட மேலோட்டமாக மட்டுமே இதை காட்டியிருக்கிறார்கள். இது திறன் பற்றாக்குறைப் பிரச்சினை. இதற்கு கல்வி நிறுவனங்களும் அரசும் தொழில் நிறுவனங்களுமே பொறுப்பு. மேலும் கல்விக் கொள்கை உருவாக்கத்துக்கான அடிப்படை கருத்தாக்க அறிக்கையில் இந்தப் பிரச்சினைக்கு வழிமுறை காண்பிக்கப்படவில்லை. இவை பிரச்சினையின் ஒரு முகம். இன்னொரு முகமும் இருக்கிறது.
பொதுவாக கல்வி என்பது வாழ்வாதாரத்தை உயர்த்தப் பயன்பட்டாலும், அடிப்படையில் அது சமூக மாற்றத்துக்கும், சமூக மேம் பாட்டுக்கும் பயன் அளித்திட வேண்டும். இதைத் தான் நேரு விரும்பினார். அதற்கு கல்வி கற்கும் மனிதனின் தரத்தை உயர்த்திட வேண்டும். அந்த நிலையை உருவாக்கத்தான் கல்வி பயன்பட வேண்டும். அதற்கான கல்வியைத்தான் நாம் உருவாக்க வேண்டும். ஆனால், தற்போதைய கல்விக் கொள்கை உருவாக்கத்துக்கான அடிப்படைச் சிந்தனை அறிக்கையில் பல அடிப்படைக் கூறுகளே இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, பார்வை இல்லை.
அந்த அறிக்கையில் சமூகப் பார்வை இல்லை. மானுடப் பார்வை இல்லை. புவிசார் பார்வை இல்லை. இவை மூன்றும் கல்வித் திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டுவர எதுவுமே சொல்லப்படவில்லை. ஒருவர் கற்கும் கல்வியின் வாயிலாக சமூகப் பிரச்சினை களை உள்வாங்கி, அதற்கு தீர்வு அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது சமூகப் பார்வை. இயற்கையைப் புரிந்துகொண்டு பல்லுயிர் சமநிலையைக் காப்பது மற்றும் பசுமை பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவது புவிசார் பார்வை. ஒருவர் கற்கும் கல்வியின் வாயிலாக மனித நேயத்துடன் கூடிய சமூகத்தை விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆன்மிகம் இவற்றுடன் ஒன்றிணைத்து மானுடம் தழைக்கச் செய்வது மானுடப் பார்வை.
கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடும் கருவி மட்டும் அல்ல; அது சமூக மாற்றத்துக்கும், சமூக மேம்பாட்டுக்கும், மானுட உயர்வுக்கும் வழிகாட்டும் கருவி! எனவே, கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவரும் சமூகப் பார்வையும், சமூகப் பொறுப்பும், சமூகக் கடமையும் கொண்டவராக மாறும் வகையில் நமது கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கான அறிக்கையில் கூறப் படாத ஒரு சீர்திருத்தம் கல்வி விரிவாக்கம். அதிகாரப் பரவல், அதிகார விரிவாக்கம் எப்படியோ… அதுபோலதான் கல்வி விரிவாக் கமும் அவசியம். அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி, கல்வி கற்பித்தல், சமூகத்துடன் தொடர்புகொண்டு மக்களுடன் பணி செய்தல் ஆகிய மூன்று பணிகள் உள்ளன. ஆனால், இன்றைய உயர் கல்வி கற்றுக் கொடுத்தலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆராய்ச்சி என்பது கட்டாயமாக இருந்தபோதும், பதவி உயர் வுக்கான ஆராய்ச்சிகள் மட்டுமே நடக்கின்றன. சமூகப் பிரச்சினைகள் சார்ந்து, ஆராய்ச்சிகளில் நம் பல்கலைக்கழகங்கள் ஈடுபடுவதே இல்லை.
எனவே கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல் என்கிற இரு நிலைகளைத் தாண்டி மூன்றாவதாக விரிவாக்கச் செயல்பாட்டை கல்வித் திட்டத்தில் கட்டாயமாக்க வேண்டும்.
சரி, விரிவாக்க கல்வியில் என்ன இருக்க வேண்டும்? அரசியல் சொல்லித் தர வேண்டும். நமது அரசியல் சாசனம் பற்றி சொல்லித் தர வேண்டும். அடிப்படை உரிமைகள் சொல்லித் தர வேண்டும். கிராம சுயராஜ்ஜியம் பற்றி சொல்லித் தர வேண்டும். மக்களுக்கான அதிகாரங்களைச் சொல்லித் தர வேண்டும். சுகாதாரத்தைச் சொல்லித் தர வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை அவர்களின் களத்துக்கே சென்று கற்பிக்க வழி செய்ய வேண்டும்.
இவை எல்லாம் புதிய வரைவுக் கல்விக் கொள்கையில் இல்லை. உயர் கல்வி பயிலும் மாணவரின் பாடத் திட்டத்தில் இவை இருக்க வேண்டும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்தில் நமது கல்விச் சாலைகளின் எண்ணிக்கையும், கற்றோரின் எண்ணிக்கையும் உயர்ந்ததே தவிர; அதன் தாக்கத்தைப் பார்க்க முடியவில்லை. காரணம் கல்விக்கும், சமூகத்துக்கும் தொடர்பு உள்ள ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கவில்லை. அந்தக் கல்விதான் விரிவாக்கக் கல்வி. அது பற்றி பெரும் விவாதம் செய்யப்பட வேண்டும். விரிவாக்கக் கல்வி என்பது கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல் என்ற இரண்டு பணிகளுடன் மூன்றாவது பணியாகச் சேர்த்தல் என்பது காலத்தின் கட்டாயம். இது நடக்கவில்லை என்றால் நம் கல்விச் சாலையில் மக்களைச் சுரண்டி வாழும் சுயநலமிக்க குறுகிய எண்ணம்கொண்ட இயந்திர மனிதர்கள்தான் உருவாக்கப்படுவார்கள்” என்கிறார் பழனிதுரை.
- பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT