Published : 28 Nov 2016 11:48 AM
Last Updated : 28 Nov 2016 11:48 AM

கோவை கவுண்டம்பாளையத்தில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கோவை கவுண்டம்பாளையத்தில் பொதுமக்களே சுமார் 100 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி, குற்றச் செயல்களைப் பெரிதும் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது கவுண்டம் பாளையம் பகுதி. இங்குள்ள பிரிக்கால் காலனியில் உள்ள 8 வீதி களை ஒருங்கிணைத்து, 3 ஆண்டு களுக்கு முன் குடியிருப்போர் நலச் சங்கம் தொடங்கப்பட்டது. அப்போது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடைபெற்றதால், பல்வேறு இடங்களில் 11 கேமராக்களைப் பொருத்தி, கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும், துடியலூர் காவல் நிலையத்திலும் ஒரு டிவியைப் பொருத்தி, கண்காணித்துள்ளனர்.

இதன் மூலம் குற்றச்செயல்கள் குறையத் தொடங்கியதால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் இவர்களுடன் இணைந்து, பல இடங் களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். தற்போது, பிரிக்கால் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், மூவர் நகர், செட்டியாரம்மா காடு, யூனியன் அலுவலக சாலை, சிவாஜி காலனி உள்ளிட்ட இடங்களில் சுமார் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பிரிக்கால் காலனி குடியிருப்போர் நலச் சங்கத் தலை வரும், அகில இந்திய வ.உ.சி. மக்கள் நல இயக்கத் தலைவருமான ஆத்மா சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக 2013-ல் முக்கிய இடங்களில் கேமராக்களை நிறுவி, 24 மணி நேரமும் கண்காணிக்கத் தொடங்கினோம். அதுமட்டுமின்றி ஒரு மாத பதிவுகளை கணினியில் சேமித்தோம். இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்போரும் எங்களுடன் இணைந்ததால், ‘மக்கள் சங்கமம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதில் தற்போது 114 குடியிருப்போர் நலச் சங்கங்கள் இணைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் சுமார் 100 கண்காணிப்புக் கேமராக்களை நிறுவி, எங்களது கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் நிலையத்தில் இருந்து 4 டிவி திரை மூலம் இவற்றைக் கண்காணித்து வருகிறோம். சிசிடிவி கேமரா அமைக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் உதவியுடன் புதிதாக கேமராக்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

ஹை-டெக் கவுண்டம்பாளையம்

முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை இணைப்பு வழங்கும் முயற்சியையும் தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் முன்மாதிரிப் பகுதியாக கவுண்டம்பாளையத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ‘ஹை-டெக் கவுண்டம்பாளையம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, அதில் பல குழுக்களையும் இணைத்து வருகிறோம்.

ஒலிபெருக்கியில் வாழ்த்து

பல பகுதிகளில் ஒலிபெருக்கி அமைத்து, காலை நேரத்தில் குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிப்பது, சமயப் பாடல்கள் ஒலிபரப்புவது, குடிநீர் வரும் நேரம் குறித்து அறிவிப்பது, மாலையில் போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். முதலில் 9 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது 60-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை நிறுவி உள்ளோம்.

“ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும்” என்பதை மனதில்கொண்டு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட பணிகளில் நாங்களே ஈடுபடுகிறோம். சொந்தமாக கொசு மருந்து அடிக்கும் கருவி வாங்கி வைத்துள்ளோம். மருத்துவ முகாம் நடத்துவது, உறுப்பினர்களின் திருமண நாளன்று அவர்களது வீட்டுக்கு மகளிர் குழுவினருடன் சென்று, பூ, பழம், இனிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்குவது, கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

குற்றம் குறைந்தது

துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிவேந்தன் கூறும்போது, “தொடக்கத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் பிடித்தோம். தற்போது, இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, 3 விபத்து வழக்குகளிலும், தப்பியோடியவர்களை கண்காணிப்புக் கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொண்டோம். இந்த கேமராக்கள் காவல் துறைக்கு பயனுள்ளதாக உள்ளன. இதுபோல, அனைத்துப் பகுதி மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம்” எனறார்.

டிவி திரை மூலம் கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமரா பதிவுகள். (அடுத்த படம்) கோவை கவுண்டம்பாளையம் பிரிக்கால் காலனியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா.

தேசத் தலைவர்களின் வரலாறு

பிரிக்கால் காலனியில் உள்ள வீதிகளுக்கு குமரன், காந்தி, நேரு, காமராஜ், படேல், வஉசி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தெருவில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், தலைவர் படத்துடன், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த சிறுகுறிப்பும் எழுதப்பட்டுள்ளது. இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்தினால், தேசத் தலைவர்கள் குறித்து எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x