Published : 13 Nov 2016 01:14 PM
Last Updated : 13 Nov 2016 01:14 PM
கல்வி அமைப்புகள் மீண்டும் உள்ளாட்சிகளிடமே ஒப்படைக் கப்பட வேண்டும் என்கிற கட்டுரையைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ஆரோக்கியமான விவாதம் உருவாகி யிருக்கிறது.
ஜனநாயக அமைப்பில் இவை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில்தான், பல்கலைக் கழகங்களின் தொலைதூரக் கல்வி நிலையங்களைக் கிராமப் பஞ்சாயத் துக்களிடம் ஒப்படைப்பதன் மூலம் கிராமங்களில் உயர்கல்வி பெறு வோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்; தொலைதூரக் கல்வி திட் டத்தில் தனியார் மையங்கள் வணிகரீதியான ஆதிக்கத்தையும் குளறுபடிகளையும் குறைக்க முடியும் என்கிறார் சென்னை அண்ணா பல் கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிலையத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை இணைப் பேராசிரியர் இரா.சீனிவாசன்.
“உலக மயமாக்கல், தகவல் தொடர்பு வளர்ச்சியால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரு கின்றன. இத்தகைய சூழலில் இளை ஞர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு தொலைதூரக் கல்வி. வயதானவர்களுக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும் மட்டுமே தொலைதூரக் கல்வி என்கிற நிலை மாறிவிட்டது. இன்று இளைஞர்கள் இங்கே குவிகிறார்கள். அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கல்வி யாக தொலைதூரக் கல்வி உரு வெடுத்திருக்கிறது. ஆனாலும், கிராம மக்களும் மலைவாழ் மக்க ளுக்கும் உயர் கல்வி என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. அதுவும் பள்ளிக் கல்வி தொடங்கி உயர்க் கல்வி வரை வணிகமாகிவிட்டச் சூழலில் கிராமத்து இளைஞர்கள் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக, ஒரு முதல் தலைமுறை பட்டதாரி வெளியே வருவது அவ்வளவு சுலபம் இல்லை.
இந்தச் சூழலில் எளிய நடை முறை, குறைந்த செலவு, பணியில் இருந்துகொண்டே, இருக்குமிடத்தில் இருந்தே உயர் கல்வி படித்தல் ஆகிய சேவைகளைத் தொலைதூரக் கல்வித் திட்டம் செய்து வருகிறது. இந்தியாவில் 1962-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சோதனை முறையில் அஞ்சல்வழிக் கல்வி தொடங்கப்பட்டது. பெரும் வர வேற்பைப் பெற்றதால் 1964-66ல் நாடு முழுக்க இதனை அமல்படுத்தும் பொறுப்பு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, தேசிய அளவிலான தொலைதூரக் கல்வி மன்றம் உருவாக்கப்பட்டு, அது இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழத்தின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்துத் தொலைதூரக் கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பும் அந்த மன்றத்திடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த மன்றத்தின் செயல்பாடுகளைப் பல்கலைக்கழக மானியக் குழு நேரடியாக கட்டுப்படுத்துகிறது. இன்று இந்தியாவில் தேசியத் தொலை நிலை பல்கலைக்கழகம் ஒன்று (IGNOU), மாநில திறந்தநிலை பல் கலைக்கழகங்கள் 13, வழக்கமான கல்விமுறை மற்றும் தொலைதூரக் கல்வி ஆகிய இரண்டையும் நடத்தும் பல்கலைக்கழகங்கள் 130, தனித் தன்மையான தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் 12 என மொத்தம் 156 நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
மேற்கண்ட பல்கலைக்கழகங் களின் மாணவர் சேர்க்கை, ஒருங் கிணைக்கும் பொறுப்புகள் தனியார் கல்வி மையங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தங்களது தொலைதூரக் கல்வி நிறுவனங்களை முற்றிலும் வணிக ரீதியாக மாற்றிவிட்டன. கல்வி கற்பிப்பது என்கிற நோக்கத்தை மறந்து, அதனை ஒரு வியாபாரமாக, பணம் சம்பாதிக்கும் உத்தியாக பாவிக்கின்றன. இதனால் தனியார் கல்வி மையங்கள் புற்றீசல் போல பெருகி கடும் வணிகப் போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் பெருகிவிட்டார்கள். கமிஷன் அடிப்படையில் கல்வி வியாபாரம் நடக்கிறது. இதனால் குழப்பங்களும் குளறுபடிகளும் ஊழல்களும் மலிந்துவிட்டன. இதனை சரிசெய்ய பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சாட்டையைச் சுழற்றி வருகின்றது. ஆனாலும், குளறுபடிகள் குறைய வில்லை.
அனைவருக்குமான கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் அரசின் நோக்கம். அது உண்மையானால், நாடு முழு வதும் இயங்கிவரும் பல்கலைக் கழகங்களின் வெளியூர் தனியார் மையங்களுக்குப் பதிலாக அவற்றை மக்களால் நடத்தப்படும் பஞ்சாயத்து ராஜ்ஜியங்களிடம் ஒப்படைக்கலாம். ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகள் அரசியல் சாசனச் சட்டத்தின் அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் பெற்றிருக்கின்றன. மக்களாட்சியின் உயிர் மையமாக விளங்கும் பஞ் சாயத்து ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே பல அற்புதங்களை நிகழ்த்தி யிருக்கின்றன. பல்வேறு குறைகள், சிரமங்கள் இருந்தாலும்கூட அவை பல்வேறு திட்டங்களை, நவீன தொழில்நுட்பங்களை, சிறப்பான கட்டமைப்புகளைக் கிராமங்களில் செய்துவருகின்றன.
தமிழகத்தில் சுமார் 12,524 பஞ்சாயத் துக்கள் இருக்கின்றன. இதுவரை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெளியூர் தனியார் மையங்கள் மூலம் நடத்தி வந்த பணிகளை இனி அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத் துக்களிடம் அளிக்கலாம். குறைந்தது, ஒவ்வோர் ஒன்றியத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஐந்து கிராமப் பஞ்சாயத் துக்களைத் தேர்வுசெய்து இந்தப் பணிகளை ஒப்படைத்தால்கூட சுமார் ஐந்தாயிரம் கிராமப் பஞ்சாயத் துக்களில் தொலைதூரக் கல்வி மையங் களை உருவாக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாக அபார மானவை.
கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். அந்தக் கிராமப் பஞ்சாயத்தில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு இந்த மையங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். விண்ணப்பப் படிவங் களை விற்பது, பூர்த்திசெய்வதில் உதவுவது, பூர்த்திசெய்த விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்வது, தொலைதூரக் கல்வி தொடர்பான விசாரணைகளுக்குப் பதிலளிப்பது, பல்கலைக்கழகப் புத்தங்களை வழங்குவது, புத்தகங்களை இருப்பு வைத்து பாதுகாப்பது, தேர்வு நேரங்களில் விண்ணப்பங்களைப் பெறுவது, நுழைவு சீட்டு வழங்குவது போன்ற அடிப்படை பணிகளே இருக்கும். எனவே, இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கும் சற்றே குறைவான கல்வி பெற்றவர்களுக்கும் இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிராமப் பஞ்சாயத்தில் இருக்கும் இந்த மையங்கள் அனைத்தும் பல்கலைக்கழகங்களுடன் கணனி வழியாக இணைக்கப்படும். இதன் மூலம் கிராம மாணவர்கள் தகவல் களை சிரமம் இல்லாமல் தங்கள் கிராமங்களில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். பழங்குடியினர் உள்ளிட்ட பட்டியல் பிரிவினர், பெண்கள், இல்லத்தரசிகள், உள்ளூரில் பணிபுரிபவர், சுய உதவிக் குழுவினர், சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்பவர், வேலையில்லாப் பட்டதாரிகள், சமூகத்தில் பல்வேறு நிலைகளில் நலிவடைந்திருப்பவர்கள் அனைவரும் மிக சுலபமாக உயர் நிலைக் கல்வியைப் பெற முடியும். மேலும், தங்கள் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இந்த மையங்கள் இருப்பதால் வணிகரீதியாக செயல்படுவதை கிராம சபை அல்லது கிராம மக்களே தடுக்க முடியும். ஊழலுக்கு இடம் இருக்காது.
இடைத்தரகர்கள் ஒழிக்கப் படுவார்கள். வருங்காலத்தில் இலவச இணையதள வசதிகள் கிராமங்களில் அறிமுகப்படுத்துபோது இந்த சேவைகள் மேலும் விரிவடையும், எளிதாக்கப்படும். கிராமங்களில் பள்ளி இறுதித் தேர்வு முடித்த இளை ஞர்கள் லட்சங்களில் செலவழித்துத் தொழிற்கல்வியோ, உயர் கல்வியோ தொடர முடியாமல் இருப்பவர்கள் பலன் அடைவர். கல்வியைத் தொடர முடியாமல் விரக்தியில் மதுப் பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தவறான திசைகளில் செல்லும் இளை ஞர்களை இதன் மூலம் நல்வழிப் படுத்தலாம்.
மாதத்துக்கு ஒருநாளை குறை தீர்ப்பு நாளாக அறிவித்து, அன்றைய தினம் பல்கலைக்கழகங்களில் இருந்து எங்களைப் போன்ற பேராசி ரியர்கள், அலுவலர்கள் கிராமங்க ளுக்கு வரச் செய்யலாம். மாணவர் களின் குறைகளை, கல்வி தொடர் பான சந்தேகங்களைக் கேட்டறிந்து தீர்வு வழங்கலாம். வாய்ப்பு இருந் தால் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் சுழற்சி முறையில் வாரம்தோறும் ஒருநாள் கிராமங் களுக்கு நேரில் சென்று வகுப்பு எடுக்கலாம்.
மக்களுக்கான கல்விப் பணிகள் மக்கள் அதிகாரம் மூலமாக நடப் பதால் உயர்க் கல்வியின் மூலம் ஜனநாயகத்தின் வேர்கள் மேலும் உறுதிப்படுத்தப்படும். மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதில் முன்னோடியாகத் திகழும் தமிழக அரசே இந்த இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால், தமிழகம் நாளை நாட்டுக்கே முன் மாதிரி மாநிலமாக உருவாகும். இந்தத் திட்டம் தேசியத் திட்டமாக வலுப்பெறும்போது அதன் பெருமை தமிழகத்துக்கே சாரும்...” என்கிறார்.
நல்ல யோசனைதானே நண்பர் களே. கடந்த சில அத்தியாயங்களாக வரலாறு, கடந்தகால, சமகால அரசியல், கல்வி, கூட்டுறவு ஆகிய வற்றின் பல்வேறு பரிணாமங்களைப் பார்த்தீர்கள். சரி, வாருங்கள், நாம் கேரளத்தின் பசுமை போர்த் திய, அதிநவீன முன்னோடி கிராமங்க ளுக்குச் சென்றுவருவோம்!
- பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT