Published : 17 Nov 2022 07:23 AM
Last Updated : 17 Nov 2022 07:23 AM
சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும், அந்தமானில் இருந்து சென்னைக்கு 7 விமானங்களும் இயக்கப்படுகின்றன. அந்தமான் சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதாலும், தமிழா்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும்.
அந்தமானில் பிற்பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீசத் தொடங்கிவிடும். அப்போது அங்கு விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் முடியாது. இதனால் அந்தமான் விமான நிலையத்தில், அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் இருக்கும். மாலையில் இருந்து நள்ளிரவு வரை விமான சேவைகள் இருக்காது.
அந்தமானில் நிலவும் மோசமான வானிலை மற்றும் விமான நிலையம் பராமரிப்பு பணிகள் நடந்ததால், கடந்த 1-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரைவிமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் 5-ம் தேதி முதல், விமான சேவைகள் தொடங்கின.
இந்நிலையில், தற்போது திடீரென நவ.15 முதல் 18-ம் தேதி வரை மீண்டும் அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை, அந்தமான் விமான நிலைய ஓடுபாதை பராமரிப்பு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் இருமுறை அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், அந்தமானில் வசிக்கும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அந்தமானில் உள்ளவர்கள் அவசரமருத்துவ சிகிச்சைக்குகூட, தமிழகத்துக்குதான் வர வேண்டும். இதனால், அத்தியாவசிய மருந்து பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்வதிலும் சிரமம்ஏற்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...