Published : 17 Nov 2022 07:53 AM
Last Updated : 17 Nov 2022 07:53 AM
சென்னை: பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவினால் அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்வதுஎப்படி என பிரம்மாண்டமான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தமிழக கடலோர மாவட்டங்களில் மத்திய, மாநில அரசு துறை மற்றும் காவல், பாதுகாப்பு அமைப்புகளின் சார்பில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அதன்படி, தமிழக கடலோர மாவட்டங்களில் காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை, ‘கடல் கண்காணிப்பு- 22’ என்ற பெயரில் நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் துறையினர், வனத்துறை, சுங்கத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் மேற்பார்வையில் பங்கேற்றனர். பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த பாதுகாவலர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்போல் ஒரு தரப்பினர் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குள் ஊருடுவினர்.
அங்கிருந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைப்பது, கப்பல்களை கடத்துவதுபோல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதுபோன்று நடித்தனர். மற்றொரு தரப்பினர் அவர்கள் ஊடுருவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், 5 அதிவிரைவு படகுகள், 14 வாடகை படகுகள் மற்றும் 5 சிறப்பு ரோந்து வாகனங்கள் ஒத்திகை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தமிழகத்துக்குள் 16 பகுதிகள் வழியாக ஊருடுவிய பயங்கரவாதிகள் போல் வேடமிட்ட பாதுகாப்பு படையினர் 111 பேர் பிடிபட்டனர். மேலும், எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தில் 3 பயங்கர வாதிகளால்பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 10 துறைமுக ஊழியர்களும் மீட்கப்பட்டதுபோல் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, துறைமுகங்கள், கோயில்கள், அரசு அலுவலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment