Published : 17 Nov 2022 04:25 AM
Last Updated : 17 Nov 2022 04:25 AM
மதுரை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற பால் விலை உயர்வு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பாஜக சார்பில் நவ. 15-ல் பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடனான குழு அழைப்பில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் நேற்று பேசியதாவது: தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது, பாஜகவினர் என்ன செய்கிறார்கள் என்பதை தேசிய தலைமை கவனித்து வருகிறது. பால் விலை உயர்வைக் கண்டித்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதை கட்சி மேலிடம் ஆர்வமாக விசாரித்து வருகிறது. இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டம் குறித்த அறிக்கை சரியானதாக இருக்க வேண்டும்.
நவ. 15 ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஒன்றியங்களும் உள்ளன. 70 பேர், 60 பேர் வந்த ஒன்றியங்களும் உள்ளன. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இது வேதனைக்குரியது ஆகும். ஆர்ப்பாட்டம் நடைபெறும் தகவல் அனைத்து பொறுப்பாளர் களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில், மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நிர்வாகிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொறுப்புகளில் இருந்தால் மட்டும் போதாது, கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் பட்டியலை கட்சிக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
ஒன்றிய அளவில் கட்சி, அணி, பிரிவில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். பொறுப்புகளை நிரப்ப நவ. 1 முதல் 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்துக்குள் பல ஒன்றியங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாதது வருத்தம் தருகிறது. ஒன்றிய அளவில் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டி ருந்தால் ஆர்ப்பாட்டத்துக்கு இன்னும் அதிகமாக ஆட்கள் வந்திருப்பார்கள்.
இனிமேல் ஒவ்வொரு ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமாக ஆட்கள் வரவேண்டும். பொதுமக்களையும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங் களுக்கு அழைக்க வேண்டும். வட்டார நிர்வாகிகள் பூத் அளவிலும், மாவட்ட நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT