Published : 15 Nov 2016 10:00 AM
Last Updated : 15 Nov 2016 10:00 AM
மலைப் பாதையில் மெல்ல ஊர்ந்துச் செல்கிறது பேருந்து. சாலையின் இருபுறமும் பசுமை. வானுயர்ந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஆங்காங்கே சலசலக்கின்றன சிற்றோடைகள். ஜன்னல் இருக்கையில் பன்னீர் தெறிக்கிறது மேகம். மலைப் பகுதி கடந்து சமவெளியில் இறங்குகிறது பேருந்து. ஆங்காங்கே வீடுகள் தென்படுகின்றன. சிறிய கடைகள், உணவகங்கள் இருக்கின்றன. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 2 மணி நேரப் பயணம்.
ஒரு பெரிய அலுவலகத்தின் முன்பாக இறக்கிவிடுகிறார் நடத்துநர். உள்ளே நுழைகிறோம். படுசுத்தமாகவும் நவீனமாகவும் இருக்கிறது வரவேற் பறை. வரிசையாகப் போடப்பட்டு இருக்கும் இருக்கைகளில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். தொலைக் காட்சியில் செய்தி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. ‘வாருவோ... வாருவோ... பட்சணம் உண் டீங்களோ?” என்று வரவேற்கிறார்கள் சுஜாதாவும் குதிரைக்குளம் ஜெயனும். நம்மை மகிழ்வுடன் வரவேற்கிறது மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்து!
சுஜாதா... மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்து பெண் தலைவர். குதி ரைக்குளம் ஜெயன் துணைத் தலைவர். இருவரும் அங்கிருந்து நம்மை இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அது பஞ்சாயத்துப் பள்ளி. ‘தலயல்’கிராமப் பஞ்சாயத்து அரசு கீழ் தொடக்க நிலைப் பள்ளி. ‘தலயல்’ என்பது அந்த இடத்தின் பெயர். மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்தில் தலா இரண்டு கீழ் மற்றும் மேல் தொடக்க நிலைப் பள்ளிகள், தலா ஒரு மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி என 6 பள்ளிகள் இருக்கின்றன. ஒரு பல்கலைக்கழக மையம் இருக்கிறது. கீழ் தொடக்க நிலைப் பள்ளியில் ப்ரி-கேஜி தொடங்கி நான்காம் வகுப்பு வரை இருக்கிறது. மேல் தொடக்க நிலைப் பள்ளியில் ப்ரி-கேஜி தொடங்கி 7-ம் வகுப்பு வரை இருக்கிறது. மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன. கடந்த அத்தியாயத்தில் சென்னை பல்கலைக்கழக இணைப் பேரா சிரியர் இரா.சீனிவாசன் பஞ்சாயத் துக்களுடன் பல்கலைக்கழக கல்வி மையங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் அல்லவா. கிட்டத்தட்ட அதுபோலவே செயல்படுகின்றன பல்கலைக்கழக மையம். இதுதவிர 34 அங்கன்வாடி மையங்கள்!
அத்தனையையும் நேரடியாக நிர்வகிக்கிறது கிராமப் பஞ்சாயத்து. ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிப்பது மட்டுமே கல்வித் துறையின் பொறுப்பு. வருகைப் பதிவு, வகுப்பு எடுக்கும் முறைகள், கல்வியின் தரம், கட்டிடங்கள் பராமரிப்பு, உள்கட்ட மைப்பு வசதிகள், கழிப்பறைகள், குழந்தைகள் விவசாயம் (ஆம், விவசாயமேதான்!) என அத்தனையும் பஞ்சாயத்து நிர்வாகமே நேரடியாக நிர்வகிக்கிறது. ஒவ்வொரு வகுப்புக் கும் ஓர் ஆசிரியர் இருக்கிறார். ஆசிரியர் சரியாக வருவதில்லையா? கல்வியின் தரம் சரியில்லையா? குழந்தைகளை அடிக்கிறாரா? நட வடிக்கை எடுக்க பஞ்சாயத்துக் கல்வி குழுவுக்கு பஞ்சாயத்துத் தலைவர் பரிந்துரைக்கலாம். நடவடிக்கையாக மூன்று ஊதிய உயர்வு வரை நிறுத்தி வைக்கலாம். கெஸடட் அல்லாத அலுவலரை பஞ்சாயத்தின் கல்விக் குழு தற்காலிகப் பணி நீக்கம் செய்ய முடியும். கெஸடட் அலுவலரை தற்காலிகப் பணி நீக்கம் செய்ய கல்வித்துறையிடம் பரிந்துரைக்க இயலும்.
“அப்படி ஏதேனும் நடந்திருக் கிறதா?” என்று கேட்டோம். அப்படி எல்லாம் இதுவரை நடந்ததே இல்லை; கேரளத்தில் அதுக்கு வாய்ப்பில்லை. நாங்கள் நண்பர்களாக்கும்” என்று சொல்லி தலைமை ஆசிரியர் ஜீனாவின் தோளில் கையைப் போட்டு சிரிக்கிறார் சுஜாதா. நான்காவது வரையே இருக்கும் பள்ளிக்கு பெரிய கட்டிடங்கள், பெரிய வளாகமும்கூட. ஒரு கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். என்ன ஆச்சர்யம்... விசாலமாக விரிகிறது மாடித் தோட்டம். நூற்றுக்கணக்கான காய்கறிச் செடிகள். கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீன்ஸ், பீர்க்கன், புடலை, பாகல், கொத்தவரை, பூசணி, வெள்ளரி என காய்த்துத் தொங்கு கின்றன. காற்றில் தலையாட்டுகின்றன கீரைகள்.
“இது எங்களோட மழலையர் தோட்டமாக்கும். காலையிலும் சாயங் காலத்திலும் அரை மணி நேரம் குழந்தைகள் இங்கே செலவிடணும். ஒவ்வொரு செடியிலும் குழந்தை களோட பேரை எழுதியிருக்கோம். இது சூர்யா செடி, இது அனுஷ்கா செடி, இது பிந்து செடி... ஒவ்வொரு செடிக்கும் அந்தந்த குழந்தைகள்தான் பொறுப்பு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்களோட செடிக்குமான பந்தம் உணர்வுபூர்வமானது. தினமும் காலையிலும் மாலையில் அவங்க சுமார் 15 நிமிடம் செடிகளோட செலவிடணும். செடிகளோட பேசத் சொல்லித் தந்திருக்கோம். காலையில வந்தவுடன் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டுவந்து ஊத்துவாங்க. ‘வெண்டைக்காய் செடியே நீ நல்லா இருக்கீயா? கத்தரிக்காய் செடியே… உனக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? தக்காளிச் செடியே இன்னைக்கு நீ நிறைய காய் காய்ச்சிருக்கே, பீன்ஸ் செடியே நேத்து உன்னோட சாம்பார் ரொம்ப நல்லா இருந்தது.’ இப்படி எல்லாம் பேசச் சொல்லிக் கொடுத்திருக்கோம். ஆரம்பத்தில் இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்னு மக்கள் நினைச்சாங்க. ஆனால் செடிகளுடன், மரங்களுடன், இயற்கை யுடன் உரையாடுவது உணர்வுபூர்வ மான விஷயம் மட்டுமில்ல; அது அறிவியல்பூர்வமான விஷயம், அறிவுபூர்வமான விஷயம்னு அவங்க ளுக்குப் புரியவெச்சோம். மாணவர்க ளுக்கு குழந்தைப் பிராயத்தில் இருந்தே இயற்கையை நேசிக்க கற்றுத் தருகிற முயற்சி இது...” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜீனா.
பள்ளியின் முன்புற வளாகத்தில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். அத் தனையும் இயற்கை விவசாயம். மலர்ச் செடிகளைப் பயிரிட்டு ‘வண் ணத்துப்பூச்சி’ தோட்டம் உரு வாக்கியிருக்கிறார்கள். செடிகளை வளர்ப்பது மட்டுமின்றி, அதற்காக பிரத்தியேக விவசாய வகுப்பும் உண்டு. அதில் காய்கறிச் செடி வளர்ப்பு, இயற்கை விவசாயம் குறித்து ஆசிரியர் சொல்லித் தரு வார். வழக்கமான பாடங்களுடன் தேனீ வளர்ப்பு, தச்சுத் தொழில், நவீன மண்பாண்டங்கள் செய்வது ஆகியவையும் கற்றுத் தரப்படுகிறது.
மாணவர்கள் பாரம் சுமக்கத் தேவையில்லை. நோட்டுப் புத்தகங் களை அவரவர் மேஜையில் வைத்து விட்டுச் செல்லலாம். அன்றைக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டுமே வீட்டுக்கு கொடுத்து அனுப்பு கிறார்கள். பஞ்சாயத்து நிர்வாகமே ஒவ்வொரு வகுப்புக்கும் பெரிய இரும்பு பீரோவை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதில் மாண வர்களின் புராஜெக்ட் வேலைகள் அடங்கிய ஆவணங்கள் அடுக்கப் பட்டிருக்கின்றன. பீரோவில் கதவில் மாணவர்களின் பெயரை எழுதி ஒட்டியிருக்கிறார்கள். நான்காம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் கீழ் தொடக்க நிலைப் பள்ளியிலேயே தனியாக கணினி வகுப்பறை வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வகுப்பறையின் முகப்பி லும் ‘மாணவர் நாடாளுமன்றம்’ என்கிற தலைப்பில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருக்கிறது. ‘குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள். காலைக் கழுவிவிட்டு வகுப்பறைக்குள் வாருங்கள். பை, தண்ணீர் பாட்டிலை அதனதன் இடங்களில் வையுங்கள். தினசரி காலை, மாலை வகுப்பறை, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணியாளரை கண்காணித்த பதிவேட்டில் கையெழுத்து வாங்குங்கள். உணவை வீணாக்காதீர்கள். பள்ளியின் மீது புகார் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரிவியுங்கள்’ என்று வாசகங்கள் அதில் எழுதப்பட்டிருக்கின்றன. காலையில் அதனை வாசித்துவிட்டே குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள்.
எல்லாம் சரி... உணவு? அது இல்லாமலா... தினசரி காலை 8 மணிக்கு உப்புமா, கிச்சடி, இட்லி, தோசை, புட்டு இவற்றில் ஏதேனும் ஒன்று தருகிறார்கள். மதியம் 12.30 மணிக்கு சோறு, கப்பைக் கிழங்கு, கீரை கடைசல், காய்கறிகள். மாலை பால், பழம் உண்டு. வாரத்தில் இருநாட்கள் மதியம் முட்டையும் கோழிக் கறியும் தருகிறார்கள். பஞ்சாயத்தின் கல்விக் குழு அடிக்கடி உணவின் தரத்தை பரிசோதிக்கிறது. மேற்கண்ட எதற்கும் பத்து பைசா செலவு கிடையாது; சீருடை உட்பட இலவசம். குழந்தைகள் நன்றாகப் படிக்க வேறு என்ன வேண்டும் நண்பர்களே!
- பயணம் தொடரும்... | படங்கள்: மு.லட்சுமி அருண்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT