Last Updated : 25 Nov, 2016 12:55 PM

 

Published : 25 Nov 2016 12:55 PM
Last Updated : 25 Nov 2016 12:55 PM

ஏறுபடி என்ற ஊரே தற்போதைய ஏர்வாடி: 15-ம் நூற்றாண்டு எல்கைக்கல் கல்வெட்டில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்கைக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், தற்போதைய ஏர்வாடி என்ற ஊர், முந்தைய காலங்களில் ஏறுபடி என்று அழைக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய எல்கைக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல் ஏர்வாடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி செல் லும் கிழக்கு கடற்கரைச் சாலையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

வறட்சியாக இருந்த ராமநாதபுரம் பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஏராளமான ஏரி, கண்மாய்களை தோற்றுவித்தனர். வைகை, குண்டாறு, கிருதுமால் நதி, தேனாறு போன்ற ஆறுகளில் தடுப்பு அணைகட்டி, கால்வாய்கள் வெட்டி, ஏரிகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர்.

பாண்டிய மன்னர்கள் காலத்துக்குப் பிறகு இப்பணிகளை சேதுபதிகள் தொடர்ந்து செய்துள்ளனர். பரமக்குடி வட்டம் கமுதக்குடி அருகே உள்ள ‘கூத்தன் கால்வாய்’ கூத்தன் சேதுபதியால் (கி.பி.1623 - 1635) தோற்றுவிக்கப்பட்டது. இதுபோல் ரெகுநாத காவிரி, ராமநாத மடை, ரெகுநாத மடை, ராஜசூரிய மடை போன்றவை இன்றும் உள்ளன.

இவ்வாறு விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட கண்மாய்களில் ஒன்று ஏர்வாடிக் கண்மாய். இதற்கு மேற்கு கடைக்கோடி புதுக்கரைக்கு எல்கையாக கல் ஒன்று நடப்பட்டுள்ளது. இந்த எல்கைக் கல்லை கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் உ.விஜயராமு கண்டறிந்தார்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் உ.விஜயராமு கூறியதாவது:

எல்கைப் பிரச்சினையால் பூசல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கண்மாய் உள்ளிட்ட இடங்களில் எல்கைக்கல்லை மன்னர்கள் நட்டுவைத்துள்ளனர். அவ்வாறு ஏர்வாடி கண்மாய்க்கு அருகில் நடப்பட்ட இந்த எல்கைக்கல் மண்ணிற்கு மேல் மூன்றேகால் அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் கொண்டதாக உள் ளது.

இக்கல்லில் வெட்டப்பட்டுள்ள வாசகங்கள் ‘உ யெறுபடி கிராமம கணமாய மெல கடககொடி புதுகரைக யெலகைககல’ ஆகும்.

ஏறுபடி கிராமம் கண்மாய் மேலகடக்கோடி புதுக்கரைக்கு எல்கைக்கல் என்பதையே இப்படி எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் மூலம் இரண்டு தொன்மையான தகவலை அறியமுடிகிறது.

இக்கண்மாய் கரைக்கு எல்கைக்கல் நடும் முன்பே ஒரு கரை இருந்துள்ளது. எனவே தான் மேலக்கடக்கோடி புதுக்கரைக்கு என்ற வாசகம் உள்ளது. தற்போதைய கரையும் இக்கல்லில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கிழக்குப் பகுதியில் உள்ளது. எனவே தற்போதைய கண்மாய் கரை குறைந்தபட்சம் மூன்றாவதாக அமைந்து இருக்கலாம்.

இந்த ஊருக்கு முந்தைய காலத்தில் ஏறுபடி என்று பெயர் இருந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டில் ‘யெறுபடி’ என்றே உள்ளது. இது மருவி தற்போது ஏர்வாடி என்று அழைக்கப்படுகிறது என்றார்.

இதுகுறித்து ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை காப்பாட்சியர் பா.ஆசைத்தம்பியிடம் கேட்டபோது, “கி.மு. 2-ம் நூற்றாண்டு முதல் 5-ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துக்களும், அதன் பின் தமிழ் வட்டெழுத்துகளும் பயன்படுத்தப்பட்டன. கி.மு. 7-ம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் எழுத்துக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஓலைச்சுவடிகள், கல் வெட்டுகளில் புள்ளி, துணை எழுத்து, குறில், நெடில் பயன்படுத்துவதில்லை. இக்கல்வெட்டு எழுத்துக்களை பார்க்கும்போது, கி.பி.14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x