Published : 19 Nov 2016 10:28 AM
Last Updated : 19 Nov 2016 10:28 AM
ஆயிரமும் ஐநூறும் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் காலை திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமண்காடு செல்லும் பேருந்து ஏறியிருந்தோம். ஏ.டி.எம்-மை நம்பியிருந்ததால் கைவசம் ரூ.60 மட்டுமே இருந்தது. பேருந்து கட்டணத்துக்கு மட்டுமே அது போதுமானது. கொலைப் பசி. இருவர் சாப்பிட வேண்டும். ஒரு நிறுத்தத்தில் கூடையோடு பேருந்தில் ஏறியவர், ‘‘இடியாப்பம், சுண்டல், ஆர்கானிக் அவியல் சாரே...” என்று கூவினார்.
மடிக் கணினி பையைக் கவிழ்த்துப்போட்டதில் கொஞ்சம் சில்லறைகள் தேறின. “நான்கு இடியாப்பம் 10 ரூவா, அவியல் 5 ரூவா... பிரகிருதி ஆசுவாச்சே, சரீரத்துக்கே ஆரோக்கியகரமாயா... நன்னியோடு காயாக்கும்” என்றார் அவர். அதாவது, இயற்கை முறையில் விளைவித்தது, உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார். பாக்குத் தட்டில் தேக்கு இலையை மூடி வைத்துக்கொடுத்தார். 30 ரூபாய்க்கு முழு திருப்தியாக சாப்பிட்டோம். காய்கறிகள் அவ்வளவு ருசி. நம்மை வயிறார வரவேற்றது நன்னியோடு இயற்கை விவசாய கிராமம்!
காலை நேரத்தில் பெண்கள் சாரை சாரையாகக் கூடையில் காய்கறிகளைச் சுமந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்தில், வாசலில், திண்ணையில், புழக்கடையில், மாடியில், கூரையில்... இன்னும் எங்கெங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் காய்கறி பயிரிட்டிருக்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள், உடைந்த குடங்கள், வாளிகள், லாரி டயர்கள் எதையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமித்திருக்கின்றன காய்கறி பயிர்கள். வசதியான வீடுகளில் அடுக்கடுக்காக மற்றும் தொங்கும் அலங்காரத் தொட்டிகளைக் கீரைகளும் காய்கறிகளும் அலங்கரிக்கின்றன. மங்களூர் ஓட்டு கூரையில் இருந்து பாம்புகளாக இறங்குகின்றன பாகல், புடலை, பீர்க்கன்கள். நேந்திரம் வாழை மரத்தை தொட்டிகளில் முட்டுக்கொடுத்து நிறுத்தி யிருக்கிறார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது அது.
இதோ அழகுத் தமிழில் வரவேற் கிறார் தாட்சாயிணி. வேளாண்மை அலுவலர். பஞ்சாயத்துத் தலைவர் அஜித்குமார், துணைத் தலைவர் ஜெயபிரபாகர், சக அலுவலர்கள் ஜெயக்குமார், சாஜிக்குமார், பிரகாஷ் உள்ளிட்டோரை அறிமுகப் படுத்தினார்.
“நன்னியோடு முழுமையான இயற்கை விவசாயக் கிராமம். அனைத்துவிதமான செயற்கை உரங்களுக்கு கிராம சபை தீர்மானம் மூலம் தடைவிதித்திருக்கிறோம். மக்கள் தெரியாமல்கூட செயற்கை உரம் வைத்திருப்பது கிராம விரோதச் செயலாகும். பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகளுக்கு தடை. வாட்டர் பாட்டில் கீழே போடக்கூடாது. அதுக்கு தனியாக விவசாய டெக்னாலஜியும் வெச்சிருக்கோம். பாக்கிறீங்களா..?” என்றவர் தங்கள் கிராமத்து இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
“இது மீந்துப்போன வாட்டர் பாட்டிலாக்கும். கீழே போட்டா மண்ணுக்கு ஆபத்து. இதோ இந்த வாட்டர் பாட்டிலின் கீழ் பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசிக்கோங்க. நாலு சொட்டு ஆமணக்கு எண்ணையை மஞ்சள் பகுதியில் சுத்தியிலும் தடவிவிட்டு, தோட்டத்தில் தொங்க விடுங்க. கெடுதல் விளைவிக்கிற பூச்சி எல்லாம் தேடி வந்து ஒட்டிக்கும். எதுக்கு பூச்சிக்கொல்லி மருந்து? அதே பாட்டிலில் இயற்கை மருந்து ஊத்தி, மூடியில ஓட்டைப் போட்டு செடிகளுக்குத் தெளியுங்கள். பிளாஸ்டிக்கை ஒழிச்ச மாதிரியும் ஆச்சு. இயற்கை விவசாயம் செஞ்ச மாதிரியும் ஆச்சு.
எங்கள் கிராமத்தில் ‘ஜெய்வ சந்தா’ என்கிற திட்டம் இருக்கு. வேளாண்மை துறை மற்றும் திருவனந்தபுரம் விவசாய கல்லூரி இணைந்து செயல்படுத்தும் திட்டம் இது. இங்கே ஜெய்வா பாடசாலை உண்டு. இயற்கை விவசாயம் கற்பிக்கிறோம். விவசாயிகளின் நிலத்துக்கே நேரடியாகச் சென்று கள வகுப்புகள் எடுக்கிறோம். இயற்கை உரம் செய்ய கத்துக்கொடுக்கிறோம். உதாரணத்துக்கு, ஒரு உரம் சொல்லித் தாரேன். மண் தரையில் சாக்கு விரித்து அதில் 90 கிலோ உலர் சாணம் பிரமிடு வடிவத்தில் குவித்து வைக்கணும். அதன் மேல் 10 கிலோ முதல் தர பிசுபிசுப்பான வேப்பம்புண்ணாக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கலந்துவிடுங்கள். அதில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா பவுடரை (Trichoderma culture) கலக்கணும். இந்தப் பவுடர் எங்களிடம் கிடைக்கும். ஒரு பக்கெட் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்துக்குக் கொண்டு வாருங்கள். இதனை பிரமிடு வடிவத்தில் குவிச்சு, அதன் மேல நன்றாகப் பிழிந்த (தண்ணீர் சொட்டக்கூடாது) ஈரச் சாக்கை மூடிவிடுங்கள். 10 நாள் கழித்து திறந்தால் ‘மைசீரியம்’ என்கிற பச்சைப் பவுடர் பூத்திருக்கும். அதனை நன்றாக கலந்துவிட்டு மூடிவிடுங்கள். 15-ம் நாள் கழித்து அதனை உபயோகிக்கலாம். இந்த உரத்தை நாங்கள் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
நன்னியோடு கிராம பஞ்சாயத்து தலைவர் அஜித்குமாருடன் வேளாண்மை அலுவலர்கள்
இன்னொன்று ‘குண பஜலா’ ஜீவாமிர்தம். விருக்ஷா (தாவரம்) ஆயுர்வேதம் மருந்து இது. உங்கள் ஊர் ‘பஞ்சகவ்யம்’ மாதிரி இது. கிள்ளினால் பால் வடியாத, ஆடுகள் கடிக்க விரும்பாத 12 வகையான இலைகளை 10 கிலோ எடுத்து பொடியாக நறுக்கிக்கோங்க. 2 கிலோ வெல்லம், 3 கிலோ கறுப்பு உளுந்து, 5 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் கோமியம் இதை எல்லாம் நறுக்கிய இலைகளோட 150 லிட்டர் தண்ணீரில் கலந்திடணும். அதனை நன்றாக மூடி வைத்து 10 நாளைக்கு தினமும் காலை, மதியம், மாலை மூணுவேளை மரக் குச்சியால் மெதுவாக கடிகார முள் திசை கோணத்தில் கலந்துவிடணும். பின்னர் அதில் காற்று புகாதபடி கெட்டியாக மூடி வைக்கணும். 5 நாட்கள் கழித்து அதனை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். மண்ணில் தெளிக்கலாம். செடிகள் செழிப்பாக வளரும். இதையும் நாங்கள் லிட்டர் ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். இப்படி நிறைய இயற்கை தொழில்நுட்பங்களை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்தும் ஒருத்தர் கட்டாயமாக இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு கிலோ அளவுக்கு விளைகிற காய்கறி செடிகளையேனும் பயிரிடணும். இதை கிராம சபை மூலம் கட்டாயப்படுத்தியிருக்கோம். வீடுகளில் செடிகளை வளர்க்க பைகள், விதைகள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை முதல்முறை நாங்கள் இலவசமாகக் கொடுக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் விளைகிற காய்கறிகள், விவசாயிகள் விளைவிக்கிற நெல், காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் ‘ஜெய்வ சந்தா’ கொள்முதல் செய்துக் கொள்ளும். அதற்கு உடனடியாக காசும் கொடுத்திடும். மார்க்கெட்டிங் கையும் ஜெய்வா பார்த்துக்கும்.
எங்கள் காய்கறிகளுக்கு கேரளத்தில் மிக நல்ல பெயரும் டிமாண்டும் உண்டு. நன்னியோடு காய்கறி என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிப்போவாங்க. ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கே வாரச் சந்தை உண்டு. காலையில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்திடும். தினசரி அருகிலுள்ள சுமார் 10 ஊர்களுக்கு எங்கள் காய்கறிகள் விநியோகம் ஆகுது. திருவனந்தபுரம் பிரஸ் கிளப் மற்றும் மீடியா சென்டரில் தினமும் எங்கள் காய்கறி, அரிசிதான் உணவாக்கும். நெடுமண்காடு ஊரில் சர்வதேச மார்க்கெட் இருக்குது. அங்கேயிருந்து வாரம் ஒருமுறை வளைகுடா நாடுகளுக்கு எங்கள் ஊர் காய்கறிகள் ஏற்றுமதியாகுது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயற்கை விவசாயிகள் எங்கள் கிராமத்தை பார்வையிட்டுச் செல்கிறார்கள்...” என்கிறார். இது மட்டுமா? வறுமையை முற்றிலுமாக ஒழித்திருக்கிறார்கள். ஏழைகள் இல்லாத ஊர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது!
படங்கள்: மு.லட்சுமி அருண் | - பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT