Published : 16 Nov 2022 08:18 PM
Last Updated : 16 Nov 2022 08:18 PM
மதுரை: ''காசநோய்க்கான குறைந்த கால மருத்துவ சிகிச்சை பற்றிய ஆராய்ச்சி நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது என அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் கருத்தரங்கு நடந்தது. நுரையீரல் பிரிவுத் துறைத் தலைவர் ஆர்.பிரபாகரன் வரவேற்றார். மருத்துவமனை டீன் ஏ.ரத்தினவேல், தலைமை வகித்து பேசினார். நுரையீரல் பிரிவு துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.பிரபாகரன் வரவேற்றார். துணை முதல்வர் வி.தனலெட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் எஸ்.விஜயராகவன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் தர்மராஜ், பொது மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் எம்.நடராஜன், நுரையீரல் பிரிவு இணைப்பேராசிரியர்கள் செ.இளம்பரிதி, ஹரிபிரசாத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டீன் ரத்தினவேலு பேசியது: ''அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை கண்டறிவதற்கு சிறப்பு கருவியான ஸ்பைரோமெட்ரி (Spirometry) பரிசோதனை மூலம் ஆண்டிற்கு 1,500 பேர் கண்டறியப்படுகின்றனர். நுரையீரல் மருத்துவப் பிரிவு மூலம் ஆண்டிற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்த சிறப்பு மருத்துவப்பிரிவில் ஆண்டிற்கு 700 ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscope) சிகிச்சையும், 40க்கும் மேற்பட்ட தோராக்கோஸ்கோப் (Thoracoscope) பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மேலும், காசநோய் மற்றும் தீவிர காசநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 1018 நுரையீரல் காசநோயாளிகளும், 497 நுரையீரல் அல்லாத காசநோயாளிகளும் கண்டறியப்படுகின்றனர். காசநோய்க்கான குறைந்த கால மருத்துவ சிகிச்சை பற்றிய ஆராய்ச்சி நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடக்கிறது. தற்போது தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் காசநோயக்கான குறைந்த கால மருத்துவ சிகிச்சை பற்றிய ஆராய்ச்சியும் நடக்கிறது.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயில் இருமல், சளி, மோசமாகி கொண்டே வரும் மூச்சுத்திணறல் ஆகியவை உடல் உபாதைகளாக இருக்கும். இந்த நோயானாது, நுரையீரலை மட்டுமின்றி எலும்புகளின் கடினத்தன்மை குறைதல், தசைகளின் உறுதித்தன்மை குறைதல், மனச்சோர்வு, முழுவதும் மக்கள் இறப்பிற்கு இதுவே மூன்றாவது முக்கிய காரணமாக இருக்கும். இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆயுள் மூலம் நாம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மூலம் இந்த நோயை வராமல் தடுக்கலாம். மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குழந்தை பருவத்தில் அடிக்கடி ஏற்பட்ட நுரையீரல் வைரஸ் தொற்று, புகை, நுரையீரல் காசநோய், உடலில் சில வேதிப்பொருட்கள் குறைபாடு, தொழில் சார்ந்த மாசு, சுற்றுப்புற காற்று மாசு ஆகியவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் வருவதற்கு காரணமாகும். அதனால், இந்த நோயை வரும் முன் காப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
புகையிலை புகைக்காமல் இருப்பது, சத்தான காய்கறிகள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, வீடு மற்றும் வேலைபார்க்கும் இடம் நல்ல காற்றோட்டமாக இருப்பது ஆகியவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் வருவதை தவிர்கும். ஆண்டிற்கு ஒரு முறை இன்புளுயன்சா தடுப்பூசியும், நிமோக்கால் மற்றும் கோவிட் 19 தடுப்பூசியும் செலுத்துக் கொள்வது நுரையீரல் தொற்று வருவதையும், அதனால் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேருவதையும் தவிர்க்கும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT