Published : 16 Nov 2022 05:36 PM
Last Updated : 16 Nov 2022 05:36 PM
புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு, மாணவர் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமூக நீதிப் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் களம் அழகர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, அம்பேத்கர் தொண்டர் படை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் திமுக அமைப்பாளர் சிவா, இந்தியக ம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சலீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடை அமல்படுத்தக் கூடாது என முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம். அப்போது அதிகாரிகள், இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால், இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
முதல்வர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது. இதைக் கண்டித்தும் நாளை மறுதினம் (நவ.18) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தில் புதுச்சேரியில் அரசுப் பணி நியமனத்தில் குளறுபடிகள் சீராக்கப்பட வேண்டும். குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டும். புதுச்சேரியில் பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT