Published : 16 Nov 2022 04:37 PM
Last Updated : 16 Nov 2022 04:37 PM

சிறுமிகளை கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவுகட்ட வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: “கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், ''பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிகழ்வு வேதனையளிக்கிறது.

சிறுமியை கடத்திய மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை படம் பிடித்தும் மிரட்டியுள்ளார். சிறுமி காவல் துறையினரால் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் மிரட்டல் தொடர்ந்ததுதான் சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித நேயமற்றவை; காட்டுமிராண்டித் தனமானவை. படித்து, வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்; சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x