Published : 16 Nov 2022 02:33 PM
Last Updated : 16 Nov 2022 02:33 PM

மதுரை அரசு மருத்துவமனையில் தேவநேய பாவாணரின் பேத்தி; சிகிச்சைக்கு அரசு உதவிட குடும்பத்தினர் வேண்டுகோள்

தேவநேய பாவாணரின் பேத்தி பரிபூரணம்

மதுரை: மொழிஞாயிறு என்று அழைக்கப்படும் தேவநேய பாவாணரின் பேத்தி பரிபூரணம், முதுகு தண்டுவடம் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவும்படி அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் மொழியின் சிறப்புகளைப் போற்றி வளர்த்ததோடு அதனை உலகறிய செய்த தமிழறிஞர் பெருமக்கள் பலரில் தேவநேய பாவாணர் குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காவும், ஆராய்ச்சிக்காகவும் செலவழித்தவர். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. அதை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.

அந்த மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்திடம் கருணாநிதி ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கி பாவாணர் குடும்பத்திற்கு உதவினார். தற்போது வரை பரிபூரணம், மதுரை அண்ணா நகரில் உள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் பணிபுரிந்து அதனை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், பரிபூரணம் (57) உடல்நலக் குறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவச் செலவை அவரால் ஈடுகட்ட முடியாததால் தற்போது சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும், முதுகு தண்டுவடம் பிரச்சினைக்கு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதனால், சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உதவும்படி அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பரிபூரணத்தின் மருமகன் ஜீவா கூறுகையில், "எங்க அத்தை பரிபூரணம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர். எங்களிடம் பெரிய பொருளாதார வசதியில்லாததால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ செலவை சமாளிக்க முடியவில்லை. தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 2 வாரமாக வலியால் மிகுந்த அவதிப்படுகிறார். இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகிறார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ கேட்டுக் கொள்கிறோம்" என்று ஜீவா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x