Published : 16 Nov 2022 01:00 PM
Last Updated : 16 Nov 2022 01:00 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் 14ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி அருகே உள்ள நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து உரிய நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT