Published : 16 Nov 2022 12:34 PM
Last Updated : 16 Nov 2022 12:34 PM
சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: "அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம். அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு" என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: "கத்தி முனையை விட பேனா வலிமையானது. பேனா முனைகள் இல்லாமல் இந்திய ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 தூண்களுடன் இணைந்து ஜனநாயகத்தைக் காக்கும் நான்காவது தூண்களுக்கு தேசிய பத்திரிகையாளர் நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை: "குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: "இந்திய பிரஸ் கவுன்சில் 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாள் இன்று. தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்: "ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT