Published : 16 Nov 2022 10:41 AM
Last Updated : 16 Nov 2022 10:41 AM

பழநி திருக்கோயிலுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழநி திருக்கோயிலுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவ.16) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.16) முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழநி, அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x