Published : 16 Nov 2022 06:33 AM
Last Updated : 16 Nov 2022 06:33 AM

‘நீட்’ தேர்வில் வென்று உயர குறைபாட்டை சாதனையாக்கிய மாணவி: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்துள்ள மாணவி நவதாரணி. படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 அடிஉயரமுள்ள வளர்ச்சிக்குறைபாடுள்ள மாணவி ஒருவர், நேற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்து உள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை மலர்களை கொடுத்து வரவேற்றனர். அப்போது 4 அடிக்கும் குறைவான உயரமுள்ள மாணவி நவதாரணி, தனது பெற்றோருடன் வந்தார். அவருக்கு சீனியர் மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்துதெரிவித்தனர். மாணவி நவதாரணிபுதுக்கோட்டை மாவட்டம் கீழா நிலக்கோட்டையைச் சேர்ந்தவர். தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து 491 மதிப்பெண்கள் பெற்று ஒரே ஆண்டில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார். நவதாரணியின் சகோதரர் தற்போது பிளஸ் 2 படிக்கிறார் அவரும் வளர்ச்சி குறைபாடுள்ளவர்.

நவதாரணியின் தாயார் அமுதா கூறியதாவது: நவதாரணி 3 வயதாக இருக்கும்போது வளர்ச்சி குறைபாடு இருந்தது. சில ஆண்டுகளில் சரியாகிவிடும் என நினைத்தோம். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோம். ஆனால் சரியாகவில்லை. அவருக்கு விவரம் தெரிந்த நாள் வரை அவரையும், தம்பியையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வந்தோம். பண வசதியில்லாததால் ஒரு கட்டத்தில் சிகிச்சையை நிறுத்தி விட்டு நன்றாக படிக்க வைப்போம் என்ற முடிவுக்கு வந்தோம். நவதாரணி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று நாங்கள் பட்ட வேதனையை நேரடியாக உணர்ந்ததால் தானும் மருத்துவராக முடிவெடுத்தார். நீட் கோச்சிங் சென்றார். ஆனால், சரியாக சொல்லி கொடுக்காததால் அவரே படித்து நீட் தேர்வில் வென்று மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x