Published : 16 Nov 2022 07:28 AM
Last Updated : 16 Nov 2022 07:28 AM
சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு வருவாய்த்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.21ம் தேதி சட்டப்பேரவையில், "வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க ஏதுவாக வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கெனவே,1996-ம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும், அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என பூர்த்தி செய்யும் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், முப்படைகள், துணை ராணுவப் படைகளில் பணியில் இருந்தபோது போரில் உயிரிழந்தவர்கள், செயலிழந்தவர்கள் குடும்பத்தினர், 1976-ம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டப்படி விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிலமற்ற ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள், முன்னாள் ராணுவப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளில் புணியாற்றியவர்கள், இதர அடிப்படை தகுதிகளை பெற்ற பயனாளிகள் ஆகியோருக்கு பட்டா வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT