Last Updated : 14 Nov, 2016 11:50 AM

 

Published : 14 Nov 2016 11:50 AM
Last Updated : 14 Nov 2016 11:50 AM

உளுந்தூர்பேட்டையில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

நிச்சயதார்த்தம் முடிந்து வீடு திரும்பியபோது சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். நிச்சயதார்த்தம் முடிந்து வீடு திரும்பியபோது சோக நிகழ்வு நடந்துள்ளது.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த சுந்தரம்(60), எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் நரேஷ்குமார் சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைப்பதற்காக தஞ்சை மாவட்டம் கருப்பூர் என்ற கிராமத்தில் மணமகள் பார்த்துள்ளனர்.

அவரை மணமுடிப்பதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிச்சயதார்த்தம் செய்வதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கார் மற்றும் வேனில் தஞ்சை சென்றிருந்தனர்.

நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, நள்ளிரவில் சென்னை நோக்கி திரும்பியுள்ளனர். கார் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சரக்கு லாரி ஒன்று இணைப்புச் சாலையிலிருந்து, திருச்சி-சென்னை 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நுழைந்தது. கார் எதிர்பாரத விதமாக லாரியின் டீசல் டேங்க் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் லாரியின் அடிப்பகுதியில் சிக்கியதில் காரில் பயணித்த காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்த சுந்தரம்(60), சுசிலா(62), ஆகாஷ்(11), குரோம்பேட்டையைச் சேர்ந்த பத்மா(35), செங்குன்றத்தைச் சேர்ந்த பாப்பாத்தி(70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற பெருங்களத்தூர்ச் சேர்ந்த ராமச்சந்திரன்(34) படுகாயமடைந்தார்.

வேனில் பின் தொடர்ந்து வந்த அவர்களது உறவினர்கள் விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் ராமச்சந்திரனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த எடைக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சரக்கு லாரிக்கு அடியில் சிக்கிய காரை மீட்டு, காரில் சிதைந்த நிலையில் இருந்த உடல்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த எடைக்கல் போலீஸார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x