Published : 15 Nov 2022 07:56 PM
Last Updated : 15 Nov 2022 07:56 PM

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள், காப்பாற்றச் சென்ற மற்றொருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே கழிவு நீர் தொட்டியில் முட்டு பிரிக்க சென்ற கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேரும், அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டிடத் தொழிலாளி என 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.

கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டி கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்) கட்டப்பட்டு 2 மாதங்களாக மூடிப்போட்டு மூடப்பட்டிருந்த நிலையில், தொட்டியின் உள் பகுதியில் உள்ள முட் டுகளை பிரிப்பதற்காக இன்று (நவ.15) மதியம் 3 மணிக்கு கட்டிடத் தொழிலாளர்களான தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (23), தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (38) ஆகிய 2 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.

உள்ளே இறங்கியவர்களை விஷவாயு தாக்கியதால் அலறிவாறே உள்ளேயே மயங்கியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்துக் கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணவாசியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சிவா என்கிற ராஜேஷ்குமார் (35) அவர்களை மீட்க தொட்டிக்குள் இறங்கியதில் அவரையும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார்.

இதனை கண்ட அங்குள்ளவர்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷவாயுவை கட்டுப்படுத்தி உள்ளே இறங்கி 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. ஏ.சுந்தரவதனம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினாவும் சம்பவ இடத்தை பார்வையி ட்டு விசாரணை மேற்கொண்டார். மாநகராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x