Published : 15 Nov 2022 04:57 PM
Last Updated : 15 Nov 2022 04:57 PM
சென்னை: சென்னையில் உள்ள எழும்பூர் கண் மருத்துவமனையில் "மெட்ராஸ் ஐ" நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் அதிக அளவு பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காற்று மூலம் பரவும் என்றும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த நோய் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறிக் கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறியாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் மெட்ராஸ் ஐ நோயை எளிதில் குணப்படுத்த முடியும். சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எழும்பூர் கண் மருத்துவமனையில் "மெட்ராஸ் ஐ" நோய்க்கான மருந்து தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினசரி 100-க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு சிகிச்சை அளிக்க புறநோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நீண்ட நேரம் நின்று சிகிச்சை பெற வேண்டி உள்ளது. ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால் அவர், ஒருவருக்கு சோதனை செய்து முடிக்கும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டிய உள்ளது.
மருத்துவர் முறையாக சோதனை செய்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து எழுதிக் கொடுக்கிறார். ஆனால், மருத்துவமனையில் அந்த மருந்து ஸ்டாக் இல்லை என்றும், வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். எப்போது வரும் என்று கேட்டால், நாளை வந்து கேட்டுப் பாருங்கள் என்கிறார்கள். எனவே மருந்து தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT