Published : 15 Nov 2022 04:10 PM
Last Updated : 15 Nov 2022 04:10 PM
சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை அடுத்து நடந்த கலவரத்தால் மூடப்பட்ட தனியார் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், "ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளியில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது இல்லை" என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம்.
பள்ளி செயல்பட தொடங்குவதால், காவல் துறை சில நாட்களுக்கு அந்த பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு மனு அளிக்க வேண்டும். அதற்கான செலவினங்களை பள்ளி நிர்வாகமே செலுத்த வேண்டும். பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க தேவைப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT