Published : 15 Nov 2022 04:51 PM
Last Updated : 15 Nov 2022 04:51 PM

17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கணினி உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்க: முத்தரசன்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: தமிழக அரசின் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் கணினி உதவியாளர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெயிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் 17 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

இந்தக் கணினி உதவியாளர்களை, அரசின் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்வது என தமிழக அரசு 2017ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை இதுவரை அமலாக்கவில்லை. பணியில் சேர்ந்து 17 ஆண்டுகளாகி விட்டதால் பணியாளர்கள் அனைவரும் 45 வயதை தாண்டிய நிலையை எட்டியுள்ளனர்.

இந்த நிலையிலும் பணிநிரந்தரம் என்பது நடைபெறவில்லை எனில் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு இல்லாத அவலநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை அரசின் கவனத்துக்கு சுட்டிக்காட்டி, ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் கோரிக்கை மீது முதல்வர் தலையிட்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x