Published : 15 Nov 2022 01:58 PM
Last Updated : 15 Nov 2022 01:58 PM
சென்னை: “ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் சுகாதார மாநாடு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.15) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைகின்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற வேண்டும் என்று சொன்னால், இங்கு எனக்கு முன்னால் உரையாற்றியிருக்கக் கூடிய இந்தத் துறையினுடைய அமைச்சரும், தலைமைச் செயலாளர், துறையினுடைய செயலாளர் எடுத்துச்சொன்ன அத்தனை வழிமுறைகளையும் நாம் கடைபிடித்தாக வேண்டும். அதற்காக நாம் பல்வேறு திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அதில் நமது கவனத்தைப் பெற்றிருக்கக் கூடிய முதன்மையான துறை எது என்று சொன்னால், அது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைதான்.
கல்வியும் மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகத்தான துறையாகச் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. மகத்தான வகையில் செயல்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கக் கூடிய நம்முடைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையினுடைய செயலாளர் செந்தில்குமார், இவர்களுக்கு துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய அதிகாரிகளையும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன் தொடர்ச்சியாக உங்களது பணிகளை மேலும் செம்மைப்படுத்தி, மக்களுக்கு உதவத் திட்டமிடும் நோக்கத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் இங்கே கூட்டியிருக்கிறீர்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அரசினுடைய நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஊரகப் பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள்.
இதைத்தான் திருவள்ளுவர், “நோய் நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்று குறிப்பிடுகிறார். வள்ளுவர் வலியுறுத்திய குறிக்கோளுடன் நமது அரசு செயல்பட்டு வருவதை நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏழை எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, இன்றளவும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டால் தேசிய அளவிலும், இதர மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதையில்தான் நமது அரசினுடைய நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் வாழும் இடங்களிலிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடி நபர்கள் என்ற எண்ணிக்கையை அடைய இருக்கிறது.
சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் (Golden Hour) என்று சொல்லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவசமாக வழங்கப்படும் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டம் 18.12.2021 முதல் செயல்படுத்தப்படுகிறது. நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகைசெய்யக்கூடிய வகையிலே ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள்.
இந்த மூன்று திட்டங்களும், நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இவற்றைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பயன்பெற நீங்கள் அனைவரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, மருத்துவ சாதனங்கள் போன்றவை மாநில நிதியிலிருந்தும், தேசிய நல்வாழ்வு நிதியிலிருந்தும் வழங்கி, வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்து, அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயர்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.
இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிசிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலகளவில் முதலிடம் தமிழ்நாடு. இதேபோல் மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் வேண்டும்.
சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசைப் படுத்துகிறார்கள். இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டு வர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவத் துறை, மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும். நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும்.
பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்திக் குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும். நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த வகையில் இந்த மாநாடு, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும. அமைய வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment