Last Updated : 15 Nov, 2022 12:54 PM

 

Published : 15 Nov 2022 12:54 PM
Last Updated : 15 Nov 2022 12:54 PM

நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு புதுச்சேரி காங்கிரஸ் எதிர்ப்பு: நாராயணசாமி 

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு புதுச்சேரியில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமூக நீதியைக் காக்கவே முழுமையாக புதுச்சேரியில் எதிர்க்கிறோம் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை செல்லும் என மூன்று நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் அத்தீர்ப்பை எதிர்க்கிறோம்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. 9 நீதிபதிகள் அமர்வில் இடஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மேல்சாதியினரின் வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 2.25 லட்சமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.3 லட்சம் என வித்தியாசம் உள்ளதால் எதிர்க்கிறோம்.

ஐந்து சதவீதம் உள்ள மேல்சாதியினருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடும், 95 சத இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடாகிறது. ரூ.8 லட்சம் வருமான உள்ள மேல்சாதியினர் அவர்களின் ஐந்து சதவீதத்தில் 2 சதவீதம்தான். இது சமூக நீதிக்கு ஏற்றதல்ல. சமூக நீதியை காக்கவே முழுமையாக புதுச்சேரி மாநிலத்தில் இதை எதிர்க்கிறோம். எங்கள் மாநிலத்துக்கு இது பொருந்தாது என்பதை கட்சித் தலைமையிடம் சொல்லிதான் எதிர்க்கிறோம். ராஜீவ் படுகொலை வழக்கில் தெளிவாக எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்.

மத்திய அரசின் நிலை இதில் பாரபட்சமாக உள்ளது. மத்திய அரசு வழக்கறிஞர் அந்த தேதியில் உச்சநீதிமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆயுள்காலம் வரை சிறையில் இருப்பதுதான் ஆயுள்தண்டனை. மத்திய மோடி அரசின் மெத்தனபோக்கின் கணக்கில்கொண்டு தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால் பேரரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ததற்கு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்வோம்.

மறுசீராய்வு மனுவை 90 நாட்களுக்குள் போடவேண்டும். மத்திய அரசு செய்யாவிட்டால் நாங்கள் மனு தாக்கல் செய்வோம். ராஜீவ் கொலையாளிகளை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னிப்பதாக கூறுவது பெருந்தன்மை. கட்சித்தொண்டர்களாகிய நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மறு சீராய்வு மனுவை நாங்கள் தாக்கல் செய்தால் கட்சித்தலைமை ஏன் கேட்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x