Published : 15 Nov 2022 12:25 PM
Last Updated : 15 Nov 2022 12:25 PM
சென்னை: "தெரியாமல் நடந்துவிட்டது, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் கால்கள் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவி பிரியா இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் தந்தை ரவிக்குமார் கூறியது: "பெரியார் நகர் மருத்துவமனையில் என் மகளை ஒரு வார காலம் சிகிச்சைக்காக வைத்திருந்தனர். காப்பீட்டுத் திட்டத்தின் ஒப்புதல் வரவேண்டும், அது வந்தபிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறினர். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து பெரிய அளவில் காலை கிழித்துள்ளனர். நரம்புகளை எல்லாம் அறுத்துள்ளனர். ரத்தம் அதிகமாக வரவும், அந்த இடத்தை இறுக்கமாக கட்டியுள்ளனர். அதன்பிறகு ஒருநாள் முழுக்க அப்படியே வைத்திருந்தனர்.
அதன்பிறகு வேறு வார்டிற்கு மாற்றிவிட்டனர். அதன்பிறகு, போதுமான மருந்துகள் இங்கு இல்லை. ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். நானும் இங்கு அழைத்து வந்தேன். சின்ன அறுவை சிகிச்சை என்பதால்தான், பெரியார் நகர் மருத்துவமனைக்கு முதலில் சென்றோம். அப்போது என் மகள் நடந்துதான் வந்தாள், இப்போது எனது பிள்ளையே போய்விட்டது சார். அந்த இரண்டு டாக்டரையும் ஒரு நர்ஸையும் சஸ்பெண்ட் செய்ததாக அமைச்சர் கூறினார்" என்றார்.
அப்போது அவருடன் இருந்த மாணவியின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு தண்டனைக் கொடுக்காமல், எதற்காக சஸ்பெண்ட் செய்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என கூச்சலிடத் தொடங்கினர். மேலும், டாக்டரை எதற்காக இடமாற்றம் செய்ய வேண்டும், அவருக்கு தண்டனை எதுவும் கொடுக்கவில்லையா. எனவே சம்பந்தப்பட்ட டாக்டருக்கு தண்டனை வழங்க வேண்டும். அந்த டாக்டரை கைது செய்ய வேண்டும். இதுபோல ஒருவரை கைது செய்தால்தான் அடுத்த டாக்டருக்கு பயம் வரும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பேசிய மாணவியின் தந்தையிடம் மருத்துவமனைக்கு வந்து மாணவியை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன கூறினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தெரியாமல் நடந்துவிட்டது, டாக்டர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறேன்" என்று சொன்னதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...